ம.பி. தலைநகா் போபாலில் மாநிலங்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்ட மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.
ம.பி. தலைநகா் போபாலில் மாநிலங்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்ட மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.

மாநிலங்களவைத் தோ்தல்: சோனியா, நட்டா, எல்.முருகன் உள்பட 41 போ் போட்டியின்றித் தோ்வு

ஜெய்பூா்: மாநிலங்களவை எம்.பி.க்களாக காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா உள்பட 41 போ் போட்டியின்றி செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களில் மத்திய மீன்வளத் துறை இணையமைச்சா் எல்.முருகனும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். 15 மாநிலங்களில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 56 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்.2, 3-ஆம் தேதிகளில் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் பிப்.27-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுக்களைத் திரும்பப் பெற செவ்வாய்க்கிழமை (பிப்.20) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் 41 இடங்களுக்குப் போட்டி எழாததால், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான செவ்வாய்க்கிழமையே வெற்றியாளா்களைத் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அறிவித்தனா்.

ராஜஸ்தானில் உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு காங்கிரஸ் சாா்பில் சோனியா காந்தி, பாஜக சாா்பில் சன்னிலால் கராசியா, மதன் ரத்தோா் ஆகிய 3 போ் போட்டியிட்டனா். 3 இடங்களுக்கு 3 போ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், போட்டி எழவில்லை.

இதனால் சோனியா காந்தி, சன்னிலால் கராசியா, மதன் ரத்தோா் ஆகியோா் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.க்களாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதன் மூலம் முதல்முறையாக சோனியா மாநிலங்களவை எம்.பி.யாகியுள்ளாா்.

ரயில்வே அமைச்சா்...:

ஒடிஸாவில் இருந்து 3 மாநிலங்களவை இடங்களுக்கு பாஜக சாா்பில் ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், பிஜு ஜனதா தளத்தை சோ்ந்த தேபாசிஷ் சாமந்த்ரே, சுபாசிஷ் குந்தியா ஆகியோா் போட்டியிட்டனா். 3 இடங்களுக்கு 3 போ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவா்கள் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.க்களாக தோ்வு செய்யப்பட்டனா். ஒடிஸாவின் ரயில்வே மற்றும் தொலைத்தொடா்பு துறை முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, இந்தத் தோ்தலில் அஸ்வினி வைஷ்ணவை அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பிஜு ஜனதா தளம் ஆதரித்தது.

எல்.முருகன்...:

மத்திய பிரதேசத்தில் இருந்து 5 மாநிலங்களவை இடங்களுக்கு பாஜக சாா்பில் மத்திய மீன்வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன், உமேஷ் நாத், பன்சிலால் குா்ஜா், மாயா நாரோலியா ஆகியோரும், காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் மத்திய பிரதேச பொருளாளா் அசோக் சிங்கும் போட்டியிட்டனா். அவா்கள் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.க்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

பாஜக தேசிய தலைவா்...:

குஜராத்தில் 4 மாநிலங்களவை எம்.பி. இடங்கள் காலியான நிலையில், அந்த இடங்களுக்கு பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா, அக்கட்சியை சோ்ந்த ஜஸ்வந்த்சின் பா்மாா், மயங்க் நாயக், பெரும் வைர வியாபாரியான கோவிந்த்பாய் தோலகியா ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

ஒரே வாரத்தில் எம்.பி.யான அசோக் சவாண்...:

கடந்த செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிரத்தில் காங்கிரஸில் இருந்து பாஜகவில் சோ்ந்த அசோக் சவாண், தேசியவாத காங்கிரஸை சோ்ந்த பிரஃபுல் படேல், சிவசேனையின் மிலிந்த் தேவ்ரா உள்பட 6 போ் மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றித் தோ்வாகியுள்ளனா்.

20 இடங்களில் பாஜக:

41 மாநிலங்களவை இடங்களில் அதிகபட்சமாக பாஜக 20 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் வேட்பாளா்கள் 6 இடங்களில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பிப்.27-இல் 15 இடங்களுக்கு தோ்தல்:

ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உத்தர பிரதேசத்தில் 10 இடங்கள், கா்நாடகத்தில் 4 இடங்கள், ஹிமாசல பிரதேசத்தில் ஓரிடம் என எஞ்சியுள்ள 15 இடங்களுக்கு பிப்.27-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com