நமது விவசாயிகள் தேச விரோதிகளா? - வைரலாகும் நடிகர் கிஷோர் கண்டனம்

தில்லியில் உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் ஆடுகளம் கிஷோர், நமது விவசாயிகள் தேச விரோதிகளா என கேள்வி எழுப்பியுள்ளார்.
நமது விவசாயிகள் தேச விரோதிகளா? - வைரலாகும் நடிகர் கிஷோர் கண்டனம்

சென்னை: தில்லியில் உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் ஆடுகளம் கிஷோர், நமது விவசாயிகள் தேச விரோதிகளா என கேள்வி எழுப்பியுள்ளார்.

2020-இல் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் 13 மாதங்கள் விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தினா். இதையடுத்து, புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது.

இந்த நிலையில், வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டா்களில் கடந்த 13-ஆம் தேதி பஞ்சாபில் இருந்து புறப்பட்டனா். ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட அவா்கள் மேலும் முன்னேறிச் செல்லாமல் இருக்க கான்கிரீட் தடுப்புகளையும், முள்வேலிகளையும் போலீசார் ஏற்படுத்தினா். அவா்கள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீா்ப் புகைக் குண்டுகளை வீசியதால் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனா். மத்திய அமைச்சா்களுடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள் நடத்திய நான்கு சுற்றுப் பேச்சுவாா்த்தைகள் முடிவு எட்டப்படாமல் தோல்வியடைந்தன.

இதையடுத்து, புதன்கிழமை காலை 11 மணிக்கு விவசாயிகள் தில்லியை நோக்கி மீண்டும் பேரணியைத் தொடங்கினா். ஹரியாணா எல்லைப் பகுதிகளான ஷம்பு, கனெளரியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி அருகே விவசாயிகள் நெருங்கியபோது, அவா்கள் மீது ட்ரோன் மூலம் கண்ணீா் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. தடையை மீறியவா்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதில பலத்த காயமடைந்த மூன்று விவசாயிகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா். அதில், 21 வயதான சுப்கரன் சிங் என்ற விவசாயி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். சுப்கரனின் தலையில் பலத்த காயம் இருந்ததாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். ‘ஹரியாணா போலீஸாா் நடத்திய ரப்பா் தோட்டா தாக்குதலில் சுப்கரன் உயிரிழந்ததாக’ விவசாயிகள் குற்றம்சாட்டினா்.

இதையடுத்து, பேரணி 2 நாள்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், தில்லியில் உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் ஆடுகளம் கிஷோர், நமது விவசாயிகள் தேச விரோதிகளா என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாங்கள் விளைவிக்கும் பொருள்களுக்கு நியாயமான விலைகளை கேட்பது இவ்வளவு அநியாயமா?? ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலையை கொடுப்போம் என்று கூறிய கபட அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் மறுபுறம் ஊடகங்களே விவசாயிகளை தேச துரோகிகள் என முத்திரை குத்துகின்றன. இவர்களை எப்படி இந்தியர்கள் என்று சொல்வது?

விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க சாலைகள் தோண்டப்பட்டன, தடுப்பு சுவர்கள் எழுப்பப்பட்டன, குழிகள் தோண்டப்பட்டன, துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன...

ஒழ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடி அரசாங்கம் இவை அனைத்தையும் செய்தது. அதுமட்டுமல்லாது அவர்களை தேச துரோகிகள் என விளிக்கவும் தொடங்கியுள்ளது.

விவசாயிகள் இனியாவது தங்களுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும் உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

நன்றி கெட்ட அவர்களுக்கு மட்டுமல்ல, தங்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கிறார்கள் இவர்கள்...

இத்தனை கருணையுள்ள நமது விவசாயிகள் தேச விரோதிகள் என்ற முத்திரைக்கு தகுதியானவர்களா?? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரது இன்ஸ்டா பதிவு சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com