உறவினர் திருமணம்: பில்கிஸ் பானு குற்றவாளிக்கு 10 நாள்கள் பரோல்

உறவினர் திருமணத்தில் பங்கேற்க பில்கிஸ் பானு குற்றவாளிக்கு 10 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளிகள்
பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளிகள்

ஆமதாபாத்: பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் சந்தனாவினர் உறவினர் திருமணத்தில் பங்கேற்க 10 நாள்கள் பரோல் வழங்கி குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளி ரமேஷ்பாய் சந்தனா, மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் தனது சகோதரியின் மகன் திருமணத்தில் பங்கேற்க வசதியாக குஜராத் உயா் நீதிமன்றத்தில் 10 நாள்கள் பரோல் கோரி கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் சிறையில் சரணடைந்த 11 குற்றவாளிகளில் 10 நாள்கள் பரோல் பெற்றிருக்கும் இரண்டாவது குற்றவாளி இவராவார்.

உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு அளித்த பிரமாணப்பத்திரத்தில், 2008ல் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து சந்தனா 1,198 நாள்கள் பரோலையும், 378 நாள்கள் விடுமுறையையும் அனுபவித்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் நடைபெற்றபோது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21. ஐந்து மாத கா்ப்பிணியாக இருந்தாா். அவரின் 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடா்பாக 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1992-ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறிப்பு கொள்கை அடிப்படையில், அவா்கள் அனைவரையும் குஜராத் அரசு விடுதலை செய்தது. அவா்களின் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 11 பேரின் விடுதலையை ரத்து செய்ததுடன், அவா்களை சிறையில் சரணடைய கடந்த ஜன.8-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அவா்கள் கோத்ரா சிறை அதிகாரிகளிடம் சரணடைந்தனா்.

அவா்களில் ரமேஷ்பாய் சந்தனா என்பவா், மாா்ச் 5-ஆம் தேதி தனது உறவினா் திருமணத்தில் கலந்துகொள்ள பரோல் கோரி, குஜராத் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை உரிய அமா்வுக்கு விசாரணைக்காக அனுப்பிவைக்குமாறு அந்த நீதிமன்றப் பதிவுத் துறைக்கு உயா் நீதிமன்ற நீதிபதி குஷ்பு வியாஸ் உத்தரவிட்டாா். அதன்படி மனு மீது விசாரணை நடத்தப்பட்டு, 10 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான பிரதீப் மோதியா என்பவருக்கு பிப்.7 முதல் பிப்.11 வரை பரோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com