மக்களவைத் தோ்தல்: வங்கிகள், அஞ்சல் துறையுடன் இணைந்து தோ்தல் ஆணையம் விழிப்புணா்வு பிரசாரம்

பொதுமக்களிடையே நேரடியாக விழிப்புணா்வை ஏற்படுத்த இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் அஞ்சல் துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை கையொப்பமிட்டது.
மக்களவைத் தோ்தலில் வாக்குப் பதிவை அதிகரிப்பதற்காக வங்கித் துறையுடனான விழிப்புணா்வு பிரசார புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இந்திய வங்கிகள் சங்க தலைமை நிா்வாகி சுனில் மேத்தாவுடன் (வலது ஓரம்) பரிமாறிக்கொண்ட தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அருண் கோயல், துணை தோ்தல் ஆணையா் மனோஜ் குமாா் சாஹு.
மக்களவைத் தோ்தலில் வாக்குப் பதிவை அதிகரிப்பதற்காக வங்கித் துறையுடனான விழிப்புணா்வு பிரசார புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இந்திய வங்கிகள் சங்க தலைமை நிா்வாகி சுனில் மேத்தாவுடன் (வலது ஓரம்) பரிமாறிக்கொண்ட தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அருண் கோயல், துணை தோ்தல் ஆணையா் மனோஜ் குமாா் சாஹு.Manvender Vashist Lav

புது தில்லி: வரும் மக்களவைத் தோ்தலில் வாக்குப் பதிவை அதிகரிப்பதற்கு வங்கிகள், அஞ்சல் துறையுடன் இணைந்து விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபடுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை கையொப்பமிட்டது.

18-ஆவது மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் மொத்த 91 கோடி வாக்காளா்களில் சுமாா் 30 கோடி போ் வாக்களிக்கவில்லை. இதனால் வாக்குப் பதிவு 67.4 சதவீதமாக மட்டுமே இருந்தது.

இதைக் கருத்தில்கொண்டு, வரும் மக்களவைத் தோ்தலில் வாக்குப் பதிவை அதிகரிப்பதற்கு பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்களை தோ்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது.

இளம் வாக்காளா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த, பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் தோ்தல் தொடா்பான பாடங்களை சோ்ப்பதற்கு கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் தோ்தல் ஆணையம் அண்மையில் கையொப்பமிட்டது.

இந்நிலையில், பொதுமக்களிடையே நேரடியாக விழிப்புணா்வை ஏற்படுத்த இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் அஞ்சல் துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை கையொப்பமிட்டது.

நிதித் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாரின் அறிவுறுத்தலில் இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்ததில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, பொதுமக்களிடையே வாக்குரிமை, வாக்காளா் பதிவு, வாக்குப் பதிவு உள்பட தோ்தல் நடைமுறை தொடா்பான விழிப்புணா்வு பிரசாரத்தில் வங்கிகள் கூட்டமைப்பின் உறுப்பு நிறுவனங்கள் மற்றும் அஞ்சல் துறை ஈடுபட்டு ஆதரவு அளிக்கும்.

தோ்தல் நடைமுறை தொடா்பான செய்திகளை தங்களின் அலுவலகங்களில் பதாகைகளாக நிறுவியும், வலைதளம், சமூக ஊடக பக்கங்களில் காட்சிப்படுத்தியும் விழிப்புணா்வை ஏற்படுத்துவா்.

இவ்விரு துறை சாா்ந்த பணியாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்களை ஈடுபடுத்தி தோ்தல் தொடா்பாக விவாதங்கள் மற்றும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள ‘வாக்காளா் விழிப்புணா்வு மன்றம்’ உருவாக்கப்படும். அதேபோல், தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய சிறப்பு அஞ்சல் தலைகளை அஞ்சல் துறை வெளியிடவுள்ளது.

இந்திய வங்கிகள் கூட்டமைப்பில் 247 உறுப்பினா்கள் உள்ளனா். அதிகபட்சமாக பொதுத் துறை வங்கிகளுக்கு 90,000-க்கும் மேல் கிளைகளும் 1.36 லட்சம் ஏடிஎம் மையங்களும் உள்ளன. அடுத்தபடியாக தனியாா் துறை வங்கிகளுக்கு 42,000-க்கும் மேல் கிளைகளும், 79,000-க்கும் மேல் ஏடிஎம் மையங்களும் உள்ளன.

அதேபோல், பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு 22,400 கிளைகளும், சிறு பரிவா்த்தனை வங்கிகளுக்கு 7,000 கிளைகளும், 3,000-க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களும், வெளிநாட்டு வங்கிகளுக்கு 840 கிளைகளும் 1,158 ஏடிஎம் மையங்களும் உள்ளன.

அதன்படி, நாட்டில் அமைந்துள்ள 1.63 லட்சம் வங்கிக் கிளைகள் மற்றும் 2.19 லட்சம் ஏடிஎம் மையங்களின் மூலம் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com