வகீல் ஹாசன்
வகீல் ஹாசன்

உத்தரகண்ட் சுரங்க தொழிலாளர்களை மீட்ட நாயகனின் வீடு இடிப்பு!

மீட்புப் குழுவுக்கு தலைமை தாங்கிய வகீல் ஹாசனின் வீடு தில்லி வளர்ச்சி குழுமத்தால் இடிக்கப்பட்டது.
Published on

உத்தரகண்ட் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் குழுவுக்கு தலைமை தாங்கியவரின் வீட்டை தில்லி வளர்ச்சி குழும அதிகாரிகள் புதன்கிழமை இடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணியின்போது கடந்த நவ. 12-ஆம் தேதி சுரங்கப் பாதை இடிந்து விழுந்தது. இதில், 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

அதிநவீன இயந்திரங்களும் மீட்புப் பணியில் தோல்வியுற்ற நிலையில், 17 நாள்கள் போராடி ‘எலிவளை’ சுரங்கம் தோண்டும் தொழிலாளர்கள் 12 பேர் குழு 41 பேரை மீட்டனர். அந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் வகீல் ஹாசன்.

இந்நிலையில், வடகிழக்கு தில்லியில் உள்ள கஜூரி காஸ் என்ற பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் வீடுகள் கட்டப்பட்டதாக கூறி பல வீடுகளை தில்லி வளர்ச்சி குழு அதிகாரிகள் புதன்கிழமை காலை இடித்துள்ளனர். இதில், வகீல் ஹாசன் வீடும் ஒன்று.

இந்த சம்பவம் குறித்து வகீல் ஹாசன் கூறியதாவது:

“41 பேரை மீட்டதற்கு அரசு அளித்த பரிசு இது. வீடு இருக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு அரசிடம் முறையிட்டு எந்த பலனும் இல்லை. இன்று முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடித்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வீடு இடிப்பு சம்பவத்தின் போது வகீல் ஹாசனை போலீஸார் தடுப்புக் காவலில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

சுரங்க மீட்புப் பணியில் ஈடுபட்ட மற்றொரு வீரர் முன்னா குரேஷி, காவலர்கள் தங்களை தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரகண்ட் சுரங்க தொழிலாளர்களை மீட்ட 12 பேர் கொண்ட குழுவில், வகீல் ஹாசன் உள்ளிட்ட 5 பேர் கஜூரி காஸ் பகுதியில் வசித்து வருபவர்கள். மீதமுள்ள 7 பேர் உத்தரப் பிரதேச மாநிலத்தை சார்ந்தவர்கள்.

மேலும், வகீல் ஹாசன் வீட்டை இடித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com