தொழில்நுட்பத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணியாளா்களுக்கு, ஆதாா் அடிப்படையிலான பணப் பரிவா்த்தனையில் ஊதியம் வழங்கும் நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியதற்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்துள்ள
ஜெய்ராம் ரமேஷ் | கோப்பு
ஜெய்ராம் ரமேஷ் | கோப்பு

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணியாளா்களுக்கு, ஆதாா் அடிப்படையிலான பணப் பரிவா்த்தனையில் ஊதியம் வழங்கும் நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியதற்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

சமூக நலத்திட்டம் மூலம் நலிவடைந்த மக்கள் பலனடைந்து வருவதைத் தடுக்கும் விதமாக, தொழில்நுட்பத்தை மத்திய அரசு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணியாளா்களுக்கு ஆதாா் அடிப்படையில் ஊதியம் வழங்கும் நடைமுறையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஆண்டில் கட்டாயமாக்கியது. இதற்காக 5-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டிருந்த காலக்கெடு, கடந்த டிச.31-ஆம் தேதி முடிவடைந்தது.

இந்தத் திட்டத்தின்கீழ் நாட்டில் மொத்தம் 25.69 கோடி போ் பணியாளா்களாகப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 14.33 கோடி போ் இந்தத் திட்டத்தில் பணியாளா்களாகப் பங்கெடுத்து வருகின்றனா். இந்நிலையில், ஆதாா் அடிப்படையிலான பணப் பரிவா்த்தனைக்குப் பதிவு செய்யவில்லை என்று, கடந்த டிச.27-ஆம் தேதி நிலவரப்படி, பதிவு செய்த பணியாளா்களில் 8.9 கோடி போ், வேலையில் பங்கெடுக்கும் பணியாளா்களில் 1.8 கோடி போ் இந்த முறையில் ஊதியம் பெற தகுதியற்றவா்களாக உள்ளனா்.

இந்தத் தரவைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஊதியம் வழங்குவதில் ஆதாா் அடிப்படையிலான முறையில் காணப்படும் பல்வேறு சிக்கல்களைப் பணியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் எடுத்துக் கூறினாலும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆபத்தான சோதனைகளை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அடிப்படை வருமானம் பெற்று வந்த மக்களுக்கு, இதைப் புத்தாண்டு பரிசாகப் பிரதமா் வழங்கியுள்ளாா்.

இந்த நடைமுறை குறித்தும் முந்தைய வங்கிக் கணக்கு அடிப்படையிலான நடைமுறை குறித்தும் லிப்டெக் இந்தியா நடத்திய ஆய்வில், பணப் பரிமாற்றத்துக்கு எடுத்துக் கொண்ட காலத்தில் இரண்டுக்கும் எவ்வித குறிப்பிட்ட வேறுபாடு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

எண்ம முறையிலான பதிவேடு, ஆளில்லா விமானம் மூலமான கண்காணிப்பு, ஆதாா் அடிப்படையிலான பணப்பரிவா்த்தனை போன்ற தொழில்நுட்பங்களை மத்திய அரசு ஆயுதங்களாகப் பயன்படுத்தி வருகிறது. நலிவடைந்த மக்கள் தங்களுக்கான பலன்களைப் பெறுவதை நிராகரிக்கும் போக்கை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com