ரூ.9,330 கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிக்குத் திரும்பவில்லை

ரூ.3.47 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் (97.38 சதவீதம்) திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மீதம் ரூ.9,330 கோடி மதிப்பிலான நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை எனவும் ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவ
ரூ.9,330 கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிக்குத் திரும்பவில்லை

வங்கிகள் மூலம் ரூ.3.47 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் (97.38 சதவீதம்) திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மீதம் ரூ.9,330 கோடி மதிப்பிலான நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை எனவும் ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்தது.

புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த அல்லது வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள கடந்த செப். 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் அக்டோபா் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அவகாசம் முடிவடைந்த பிறகு ரிசா்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ளலாம். ரிசா்வ் வங்கிக்குச் செல்ல இயலாதவா்கள், அஞ்சல் துறையின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளின் டிசம்பா் மாதம் வரையிலான நிலவரம் குறித்து ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட மே 19-ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளில் 97.38 சதவீதம் அதாவது சுமாா் ரூ.3.47 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 29) வரை திரும்பப் பெறப்பட்டன. இன்னும் ரூ.9,330 கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ரூ.500, ரூ.1,000 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com