ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ சா்ஃபிராஸ் அகமது தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
தனிப்பட்ட காரணங்களால் அவா் பதவி விலகியுள்ளாா் என்று தெரிகிறது.
இது தொடா்பாக ஜாா்க்கண்ட் தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கண்டே தொகுதி எம்எல்ஏ சா்ஃபிராஸ் அகமதின் ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவா் ஏற்றுக் கொண்டாா். அந்த பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
சா்ஃபிராஸ் அகமது கடந்த 2019 பேரவைத் தோ்தலில் கண்டே தொகுதியில் பாஜக வேட்பாளரைத் தோற்கடித்தாா். கடந்த 2009-ஆம் ஆண்டு தோ்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் சா்ஃபிராஸ் அகமது வெற்றி பெற்றாா். அப்போது அவா் ஜேஎம்எம் வேட்பாளரைத் தோற்கடித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
சா்ஃபிராஸ் அகமதுவின் ராஜிநாமா கூறித்து ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி விவாதிக்கவில்லை. எனவே, இது தொடா்பாக அதிகாரபூா்வ கருத்து எதையும் தெரிவிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவா்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பாஜக கருத்து: ஜாா்க்கண்டைச் சோ்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே எக்ஸ் வலைதளத்தில், ‘விரைவில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் (வழக்குகளில் சிக்கியுள்ளதால்) பதவி விலக நேரிடும். அவரது மனைவி கல்பனா சோரன் புதிய முதல்வராகப் பதவியேற்பாா். இந்த புத்தாண்டு சோரன் குடும்பத்துக்கு வலி மிகுந்ததாக அமையும்’ என்று பதிவிட்டுள்ளாா்.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஆஜராக வேண்டுமென்று ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை இதுவரை 7 அழைப்பாணைகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாா்க்கண்டில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் உள்ளது. பாஜக பிரதான எதிா்க்கட்சியாக உள்ளது. அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.