பிரதமரின் தொகுதியில் பாஜகவினரால் மாணவி கூட்டுப் பாலியல் துன்புறுத்தல்: காங்கிரஸ்

பிரதமரின் தொகுதியில் ஐஐடி மாணவி கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைதானவர்களுடன் பிரதமர் மோடி, ஜெ.பி.நட்டா
கைதானவர்களுடன் பிரதமர் மோடி, ஜெ.பி.நட்டா

பிரதமரின் தொகுதியில் ஐஐடி மாணவி கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பிரதமரின் பிஆர்ஓ அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியை நவ.1-ம் தேதி நள்ளிரவில் பல்கலைக்கழக வளாகத்திலேயே மூன்று நபர்கள் துப்பாக்கி முனையில் பாலியல் துன்புறுத்தல் செய்தனர்.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 2 மாதங்களுக்குப் பிறகு அதில் தொடர்புடைய குணால் பாண்டே, ஆனந்த் சௌகான் மற்றும் சாக்‌ஷம் படேல் ஆகிய மூன்று நபர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் பாஜகவில் பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் பாஜக தலைவர்கள் நரேந்திர மோடி, ஜெ.பி.நட்டா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பாஜக பிரமுகர்களால் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ரவீந்திரபுரியில் உள்ள பிரதமரின் பிஆர்ஓ அலுவலகத்தின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும், தடுப்புகளை அமைத்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரி விஜய் சுக்லா தெரிவித்தார்.

இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகவேந்திர சௌபே, “பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரி நான்கு அம்ச குறிப்பாணையை சமர்ப்பித்துள்ளோம்.

இந்த சம்பவம் நடந்த உடனேயே, பாஜகவுடன் தொடர்புடையவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறினார். ஆனால் அவர் மீது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி அவதூறு புகார் அளித்தது. அதனடிப்படையில் அவர் மீது போடப்பட்ட அவதூறு வழக்கையும் திரும்பப் பெற வேண்டும்.

மேலும் நவம்பர் மாதம் முதல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை விசாரிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குணால் பாண்டே பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர், சாக்‌ஷம் படேல் பாஜக தலைவர் திலீப் படேலின் உதவியாளர் ஆவார். இதுதான் பாஜகவின் முகம். வெட்கக்கேடு.” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com