இணையவழி விளையாட்டுகள் மீது 28% ஜிஎஸ்டி வரி: மத்திய அரசு விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அனைத்து இணையவழி விளையாட்டுகள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக மத்திய அரசின் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இணையவழி விளையாட்டுகள் மீது  28% ஜிஎஸ்டி வரி: மத்திய அரசு விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


புது தில்லி: அனைத்து இணையவழி விளையாட்டுகள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக மத்திய அரசின் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தில், பணம் தொடா்புடைய அனைத்து இணையவழி விளையாட்டுகளுக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்த வரி விதிப்புக்கு எதிராக ட்ரீம் 11, கேம்ஸ் 24*7, ஹெட் டிஜிட்டல் வொா்க்ஸ் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய இணையவழி விளையாட்டு நிறுவன கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன் இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இணையவழி விளையாட்டு நிறுவன கூட்டமைப்பு சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஹரிஷ் சால்வேயும் மத்திய அரசு சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் என்.வெங்கடரமணியும் ஆஜராகினா்.

இதேபோன்ற வழக்குகளில் பல்வேறு உயா்நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து இருதரப்பு வழக்குரைஞா்களும் சமா்பித்த விவரங்களை நீதிபதிகள் கவனத்தில் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, இந்த மனு குறித்து சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவுப் பிரிவு இயக்குநா் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு மனுவை ஒத்திவைத்தனா்.

இவ்விவகாரத்தில் பொதுவான மனுவைத் தாக்கல் செய்வதற்காக நோடல் ஆலோசகரை நியமித்த நீதிபதிகள் அமா்வு, அந்த மனுவை விரைவில் விசாரிக்கும் என்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com