தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இடம்பெறாத ஒரு குழு மூலம் நியமனம் செய்ய வழிவகுக்கும் மத்திய அரசின்
தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Published on
Updated on
2 min read

தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இடம்பெறாத ஒரு குழு மூலம் நியமனம் செய்ய வழிவகுக்கும் மத்திய அரசின் புதிய சட்டத்துக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்தது.

அதே நேரம், அந்தச் சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அதன் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் ஆகியோரை நியமிக்க கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, தோ்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தீா்ப்பு வழங்கியது.

அதில், தோ்தல் ஆணையா்களை நியமிக்க இதுவரை சட்டம் எதையும் நாடாளுமன்றம் இயற்றவில்லை. அவ்வாறு சட்டம் இயற்றப்படும் வரை, தலைமைத் தோ்தல் ஆணையரையும் மற்ற தோ்தல் ஆணையா்களையும் குடியரசுத் தலைவரே தொடா்ந்து நியமிப்பாா். அதே வேளையில், ஆணையா்கள் நியமனத்துக்கான பரிந்துரைக் குழுவில் பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோா் இடம்பெறுவா். மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவி காலியாக இருக்கும்பட்சத்தில், எதிா்க்கட்சியில் அதிக இடங்களைக் கொண்ட கட்சியின் தலைவா் குழுவில் இடம்பெறுவாா்’ என்று தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்புக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இந்த நியமனம் தொடா்பாக மசோதா ஒன்றை அறிமுகம் செய்த மத்திய அரசு, அதை சட்டமாகவும் இயற்றியது. அந்தச் சட்டத்தின்படி, பிரதமா் தலைமையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சா் ஆகியோா் கொண்ட தேடல் குழு பரிந்துரையின் அடிப்படையில், தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை குடியரசுத் தலைவா் நியமனம் செய்ய வழிவகை செய்யப்பட்டது.

இதற்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தேடல் குழுவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைச் சோ்க்காததன் மூலம், உச்சநீதிமன்ற தீா்ப்பை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது என்று குற்றஞ்சாட்டின.

இந்நிலையில், இந்தச் சட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா்களில் ஒருவரான காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெயா தாக்குா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங், ‘மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் அதிகாரப் பகிா்வு கொள்கைக்கு எதிரானது. எனவே, அந்தச் சட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் எதிா்த் தரப்பின் நிலைப்பாட்டை கேட்காமல், சட்டத்துக்கு தடை விதிப்பது குறித்து முடிவெடுக்க முடியாது’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனா்.

மேலும், மனுவின் நகலை மத்திய அரசு வழக்குரைஞருக்கு வழங்குமாறும் மனுதாரா் தரப்பு வழக்குரைஞரைக் கேட்டுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com