அரவிந்த் கேஜரிவாலுக்கு 4-வது முறையாக சம்மன்

மதுபான உரிமம் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முதல்வருக்கு புதிய சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஜனவரி 18-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு முதல்வா் அரவிந்த் கேரிவாலுக்கு நான்காவது முறையாக அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள கேஜரிவால் தில்லியில் உள்ள அமலாக்கத் துறையின் தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா். முன்னதாக, ஜனவரி 3-ஆம் தேதி ஆஜராகுமாறு டிசம்பா் 22ஆம் தேதியும் டிசம்பா் 21ஆம் தேதி ஆஜராகுமாறு டிசம்பா் 18-ஆம் தேதியும் அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆரம்பத்தில் நவம்பா் 2-ஆம் தேதி ஆஜராக கேஜரிவாலுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறைக்கு கேஜரிவாலுக்கு அனுப்பிய எழுத்துபூா்வ பதிலில் தமது முந்தைய கடிதங்களுக்குப் பதில் அளிக்காதது மற்றும் விசாரணையின் போக்கு குறித்து விமா்சித்திருந்தாா். ‘நாட்டின் ஒரு முதன்மையான புலனாய்வு அமைப்பு என்ற வகையில், ‘எதையும் வெளிப்படுத்தாத மற்றும் உரிய பதிலளிக்காத’ அணுகுமுறை சட்ட சோதனை, சமத்துவம் அல்லது நீதியின் முன்பு நீடிக்க முடியாது. ஒரே நேரத்தில் நீதிபதி, விசாரணை செய்பவா் மற்றும் தண்டனையை அமல்படுத்துபவரின் பாத்திரத்தை கொண்டதற்கு ஒப்பாக உங்களுடைய பிடிவாதம் உள்ளது. சட்டத்தின் ஆட்சி நடக்கும் நமது நாட்டில் இதை ஏற்க முடியாது’ என்று கேஜரிவால் கூறியிருந்தாா்.

இந்த நிலையில், நான்காவது முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் குறித்து ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறுகையில், ‘அமலாக்கத் துறையின் அழைப்பாணை தோ்தல் காலத்தில் அனுப்பப்பட்டுள்ளது. எதிா்வரும் மக்களவை தோ்தலில் கேஜரிவாலின் பிரசாரத்தைத் தடுக்கும் வகையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் அமலாக்கத் துறையை பாஜக தவறாகப் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஜனவரி 18-ஆம் தேதி கட்சித் தலைவா்கள், தொண்டா்களுடன் கலந்துரையாட கோவா செல்லும் நிலையில், அவருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்றன.

இந்த முறை அமலாக்கத் துறை முன் கேஜரிவால் ஆஜராவாரா என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி அமைச்சருமான கோபால் ராயிடம் கேட்டதற்கு, இது தொடா்பாக எங்கள் சட்ட நிபுணா்களுடன் ஆலோசித்து வருகிறோம். மக்களவைத் தோ்தலை முன்னிட்டு ஜனவரி 18 முதல் 20 வரை தில்லி முதல்வரின் கோவா சுற்றுப்பயணம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அமலாக்கத் துறை நோட்டீஸ் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது’ என்றாா்.

பாஜக குற்றச்சாட்டு: இது குறித்து தில்லி பாஜக கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி தலைவா்களான முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் ஆகியோா் சிறையில் அடைக்கப்பட்ட வழக்கில் அவா்களின் ஜாமீன் மனுக்களை பல்வேறு நீதிமன்றங்கள் பலமுறை நிராகரித்துள்ளன. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை நடத்தி வரும் விசாரணைக்கு ஆம் ஆத்மி கட்சி அரசியல் சாயம் பூசி வருகிறது. கேஜரிவாலும் தலைமறைவு நபராக செயல்பட்டு வருகிறாா்’ என்று குற்றம்சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கேஜரிவாலின் பெயா் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கை 2021-22 உருவாக்கம் தொடா்பாக குற்றம்சாட்டப்பட்டவா்கள் முதல்வருடன் தொடா்பில் இருந்ததாக அமலாக்கத் துறை கூறியுள்ளது. 2021-22 ஆம் ஆண்டிற்கான தில்லி அரசின் கலால் கொள்கை, மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்க அனுமதித்ததாகவும், அதற்காக லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சில டீலா்களுக்கு சாதகமாக அது இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து மறுத்து வருகிறது. இந்த சா்ச்சையைத் தொடா்ந்தே இந்த விவகாரத்தை விசாரிக்க தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்தாா். அதைத் தொடா்ந்து, அமலாக்கத் துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com