அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு: மிசோரம் முன்னாள் முதல்வர் சோரம்தங்கா அறிவிப்பு!

வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவதாக மிசோரம் முன்னாள் முதல்வர் சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.
சோரம்தங்கா (கோப்புப்படம்)
சோரம்தங்கா (கோப்புப்படம்)

வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறப் போவதாக மிசோரம் முன்னாள் முதல்வர் சோரம்தங்கா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநிலத்தின் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம்தங்கா, கட்சியின் மூத்த துணைத் தலைவர் டான்லூயாவுடன் இது பற்றி விவாதித்ததாகவும், அவர்கள் இல்லாமல் கட்சி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று இருவரும் முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

இதுகுறித்து மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் இன்று (ஜன.15) நடைபெற்ற கட்சி அலுவலக திறப்பு விழாவில் பேசிய சோரம்தங்கா, "எனக்கும், கட்சியின் துணைத் தலைவர் டான்லூயாவுக்கும் 80 வயது ஆகிவிட்டது. எனவே இனி நாங்கள் இல்லாமல் கட்சி செயல்பாடுகள் தொடர வேண்டும்.

இதுபற்றி நாங்கள் இருவரும் ஆலோசித்து முடிவெடுத்து உள்ளோம். எங்களது ஓய்வு குறித்து கட்சித் தலைவர்களுக்கும் தெரிவித்துள்ளோம். புதிய ஏற்பாடுகள் குறித்து கட்சியின் தலைவர்கள் விரைவில் அறிவிப்பார்கள்" என்று கூறினார்.

சமீபத்தில் நடைபெற்ற மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் எம்என்எஃப் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, சோரம்தங்கா டிசம்பர் 5ஆம் தேதி தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். ஆனால், அவரது ராஜிநாமாவை கட்சித் தலைமை நிராகரித்தது.

மிசோ தேசிய முன்னணியை நிறுவி 1966-ஆம் ஆண்டு முதல் 1986-ஆம் ஆண்டு வரை இயக்கத்தை முன்னெடுத்த லால்தெங்காவின் மரணத்திற்குப் பிறகு, 1990 முதல் கட்சியின் தலைவராக சோரம்தங்கா பதவி வகித்து வருகிறார்.

1987, 1989, 1993, 1998, 2003 மற்றும் 2018 ஆகிய 6 முறை சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மூன்று முறை முதல்வராகப் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com