அயோத்தியில் உள்ள ராமர் கோயில்
அயோத்தியில் உள்ள ராமர் கோயில்

ஜன.22 விடுமுறை ஏன்? அரசுக்கு எதிராக சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்கு!

மகாராஷ்டிரத்தில் ஜனவரி 22 விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கு எதிராக 4 சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 
Published on

மகாராஷ்டிரத்தில் ஜனவரி 22 விடுமுறையாக அறிவிக்கப்படுவது சட்டத்திற்கு எதிரானது என சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மதச்சார்பற்ற நாட்டில் அரசு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக செயல்படுவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.  

பாம்பே உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு ஞாயிறு அன்று விசாரணைக்கு வருகிறது. ஜனவரி 22 நடைபெறவுள்ள ராமர் கோயில் சிலைப் பிரதிஷ்டை நிகழ்வை முன்னிட்டு அந்த நாள் விடுமுறை நாளாக மகாராஷ்டிர அரசு அறிவித்தது. 

வேதாந்த் கௌரவ் அகர்வால், குஷி சந்தீப் பாங்கியா, சத்யஜீத் சிதார்த் சால்வே, சிவாங்கி அகர்வால் ஆகிய மாணவர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் ஜி.எஸ். குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. 

'அரசு வெளிப்படையாக குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவு அளிப்பதும், அதைக் கொண்டாடுவதும், ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையில் பங்கேற்று நடத்துவதும் இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கைகளின் மீதான நேரடித் தாக்குதலே' எனத் தங்கள் மனுவில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  

மேலும், 'பொது விடுமுறைகளை அறிவிப்பது தொடர்பான முடிவுகளை, அதிகாரத்தில் உள்ள கட்சியின் விருப்பத்திற்கு ஏற்றதுபோல் மாற்றிக்கொள்ள முடியாது.' எனத்தெரிவித்துள்ளனர்.

பொதுவிடுமுறை என்பது தேச பக்தர்களை நினைவுகூர்தல் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே அறிவிக்கலாம் எனவும், ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு விடுமுறை அளிப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக அரசு செயல்படுவதாகக் காட்டுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளனர். 

இன்று காலை விசாரணைக்கு வந்த இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22 நடக்கவிருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுதும் பல அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும், வங்கிகளுக்கும் அரை நாள் மற்றும் முழு நாள் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com