ஆம் ஆத்மி அரசு ராம ராஜ்ய பாதையில் மக்களுக்கான சேவையை  செய்து வருகிறது: அரவிந்த் கேஜரிவால்

ஆம் ஆத்மி அரசு  "ராம ராஜ்யம்" என்ற கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு, தில்லி மக்களுக்கு பல்வேறு சேவைகளை மேற்கொள்வதில் உத்வேகம் பெற்று வருகிறோம்
ஆம் ஆத்மி அரசு ராம ராஜ்ய பாதையில் மக்களுக்கான சேவையை  செய்து வருகிறது: அரவிந்த் கேஜரிவால்

புது தில்லி: ஆம் ஆத்மி அரசு  "ராம ராஜ்யம்" என்ற கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு, தில்லி மக்களுக்கு பல்வேறு சேவைகளை மேற்கொள்வதில் உத்வேகம் பெற்று வருகிறோம் என்று ஞாயிற்றுக்கிழமை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமரின் சிலை திங்கள்கிழமை (ஜன. 22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. 

இதையொட்டி, தில்லியில் அரசின் கலை, கலாசாரம் மற்றும் மொழி வளா்ச்சித் துறை சாா்பில் மூன்று நாள் ராம்லீலா சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்று பேசியதாவது:

அயோத்தியில் ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமரின் சிலை திங்கள்கிழமை பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் ஏராளமானவா்கள் பங்கேற்க விரும்பிய போதிலும், அவா்களால் அங்கு (அயோத்தி)செல்ல முடியாது. ஆகையால் தில்லி மக்களுக்காக  அரசு அது போன்ற ஒரு நிகழ்ச்சியை தில்லியில் நாம் ஏற்பாடு செய்திருக்கிறோம் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில், நாம் பகவான் ஸ்ரீராமரை வணங்கும்போது, அவருடைய வாழ்க்கை, எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளில் இருந்து உத்வேகம் பெற வேண்டும்.

நாம் ராமரை வணங்கினால், நமது பெற்றோா் கூறுவதை கேட்க வேண்டும், உண்மையைப் பேச வேண்டும் என்பதை நம் வாழ்வில் உள்வாங்க வேண்டும்.

ராமர் அயோத்தியின் ஆட்சியாளர், அவர் அளித்த ஆட்சி சிறந்த ஆட்சியாக கருதப்படுகிறது,ராமனின் நிா்வாகம் ‘ராம ராஜ்யம்’ என்று கருதப்படுகிறது. அந்த ராம ராஜ்யமே நமக்கு உத்வேகம் அளிக்கிறது" என்று அவர் கூறினார்.

ஆம் ஆத்மி அரசு  "ராம ராஜ்யம்" என்ற கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு, தில்லி மக்களுக்கு பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கேஜரிவால் மேலும் கூறினார்.

தில்லியில் யாரும் பசியுடன் தூங்கக் கூடாது என்றும், அனைவருக்கும் முறையான ரேஷன் கிடைக்க வேண்டும் என்று  அரசு முடிவு செய்துள்ளது.

"ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது.வீடு இல்லாதவர்கள் தங்குவதற்கு இரவு தங்குமிடங்களை உருவாக்கியுள்ளோம். அங்கு அவர்களுக்கு இலவசமாக உணவும் வழங்கப்படுகிறது” என்று முதல்வர் கூறினார்.

ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரனாக இருந்தாலும் சரி அவர்களது குழந்தைகள் நல்ல கல்வியை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கு தரமான இலவச சிகிச்சை அளிக்கவும், அனைவருக்கும் மின்சாரம் அளிக்கவும் முடிவு செய்துள்ளோம்.

தில்லியில் உள்ள முதியவர்களை இலவசமாக புனித யாத்திரை அழைத்து செல்வதற்கும், பெண்கள் உட்பட அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கேஜரிவால் கூறினார்.

'ராம ராஜ்யம்' ஒரு பெரிய விஷயம், நாங்கள் மிகவும் சிறியவர்கள் ஆனால், ஒரு வகையில், அது எங்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு ஆதாரம்," என்று அவர் மேலும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com