கோப்புப்படம்
கோப்புப்படம்

விதவையின் கருக்கலைப்புக்கு அனுமதியளித்த உத்தரவை திரும்பப் பெற்ற நீதிமன்றம்

கணவரை இழந்த 29 வார கர்ப்பிணியின் கருவைக் கலைக்க அனுமதி அளித்துப் பிறப்பித்த உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
Published on


புது தில்லி: கணவரை இழந்த 29 வார கர்ப்பிணியின் கருவைக் கலைக்க அனுமதி அளித்துப் பிறப்பித்த உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.

விதவையின் 29 வார கருவைக் கலைப்பதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், ஜனவரி 4ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.

29 வார கர்ப்பிணிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணமாகியிருக்கிறது. அவர் கடந்த அக்டோபரில் கணவரை இழந்துள்ளார். இதனால், அவர் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமோனியம் பிரசாத், ஜனவரி 4ஆம் தேதி, கருவைக் கலைக்கப் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாக இன்று தெரிவித்துள்ளார்.

மருத்துவ அறிக்கைகள் மற்றும் மனநல நிபுணர்களின் அறிக்கைகளை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 29 வாரக் கருவைக் கலைக்க எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ ரீதியாக ஒப்புதல் அளிக்கவில்லை.

கருவில் இருக்கும் சிசுவின் உயிர் வாழும் உரிமையை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நீதிபதி பிரசாத் தீர்ப்பளித்த போது, மனுதாரரின் மணவாழ்க்கை தற்போது மாறிவிட்டது. இப்போது அவர் விதவையாகிவிட்டார். அவரது கணவரின் இறப்பால், கர்ப்பிணி கடுமையான மனநல பாதிப்பைச் சந்தித்துள்ளதாக எய்ம்ஸ் அளித்த மருத்துவ அறிக்கையையும் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த சூழ்நிலையில், கர்ப்பிணி, தனது கருவைக் கலைக்க அனுமதி அளிப்பதே சிறந்ததாக இருக்கும் என்று நீதிமன்றம் கருதுகிறது, ஏனெனில், கருவைத் தொடர அனுமதியளிப்பது அவரது மன உறுதியைக் குலைக்கலாம் என்றும், அவர் தற்கொலை செய்துகொள்வதற்கான அறிகுறிகளைக் கொண்டிருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, மனுதாரருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் கருவைக் கலைப்பதற்கான நடைமுறையை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மனுதாரர் கருவைக் கலைப்பதற்கான அதிகபட்ச காலங்களான 24 வாரங்களைக் கடந்துவிட்டாலும், எய்ம்ஸ் மருத்துவமனையிடம் இந்த நடைமுறையை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தீர்ப்பில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com