அனைவரின் பார்வையும் அயோத்தி மீது.. திருப்பதியில் கூட்டம் குறையுமா?

வழக்கமாக வட இந்திய மாநிலங்களில் உள்ள முக்கிய தலங்களுக்கு சுற்றுலா அல்லது ஆன்மிகச் சுற்றுலா செல்ல விரும்புவோர் இதுவரை ஷீரடி மற்றும் தில்லி என்றால் தாஜ் மகாலுக்குச் செல்வது வழக்கம்.
அயோத்தி
அயோத்தி


வழக்கமாக வட இந்திய மாநிலங்களில் உள்ள முக்கிய தலங்களுக்கு சுற்றுலா அல்லது ஆன்மிகச் சுற்றுலா செல்ல விரும்புவோர் இதுவரை ஷீரடி மற்றும் தில்லி என்றால் தாஜ் மகாலுக்குச் செல்வது வழக்கம்.

ஆனால், இனி பலரது பார்வையும் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயில் மீது திரும்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கும் கோவாவுக்கும் கடற்கரையை அனுபவிக்கச் செல்ல திட்டமிடுவோர் கூட, இந்த முறை புத்தம் புதிதாக ஜொலிக்கும் அயோத்தி ராமர்  கோயிலுக்குச் செல்ல திட்டமிடுவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இதுவரை வட இந்திய மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்பிய, திட்டமிட்ட பலரும், இனி எங்குச் செல்வது என்று குழம்பாமல் மிக விரைவாக அயோத்தி செல்லலாம் என்று முடிவெடுத்து விடுவார்கள்.  அயோத்தி என்பது ஒரு மத ரீதியான மற்றும் பிரம்மாண்டத்தால் மக்களின் அதிக கவனத்தைப் பெறும் தலமாக மாறிவிட்டது.

பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே, இப்படி ஒரு கூட்டத்தைக் கண்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு, நேற்று ஒரு நாளிலேயே கூட்ட நெரிசலையும் கண்டுவிட்டது அயோத்தி ராமர் கோயில்.

முதல் நாளிலேயே ஸ்ரீபால ராமரை தரிசித்துவிட வேண்டும் ஆவலோடு பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் ராமர் கோயிலில் குவிந்ததால் இதனை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். திறந்த முதல் நாளிலேயே இத்தனை கூட்டம் வரும் என்று எதிர்பார்க்காத கோயில் நிர்வாகமும், அவர்களை வரிசைப்படுத்தக் கூட எந்த ஏற்பாடுகளையும் செய்யாமல் விட்டிருந்தது.

வெறும் இந்துக் கோயில் என்பதற்காக மட்டுமல்ல, நமது கலாசாரம் மற்றும் நாகரீகத்தின் அடையாளமாகவும் இதனை பலரும் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ராமருக்கான சிறப்பு தலங்கள் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் அதிகம் இருந்தாலும், வட இந்திய மாநிலங்களில்தான் ராமரை மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள். அந்த வகையில், தென் மாநிலங்களுக்கும் வட மாநில மக்களுக்கும் இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவார் ஸ்ரீபால ராமர் என்றே கருதப்படுகிறது.

இந்த கோயில் கட்டப்படுவதற்கு முன்பு, ஆந்திர மாநிலத்தில் ராமாயணத்துடன் தொடர்புடைய கோயில்கள் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் தற்போது தெரிய வந்திருப்பதால், பலரும் நமது அண்டை மாநிலங்களில் ராமாயணத்துடன் தொடர்பிருக்கும் கோயில்களுக்குச் செல்லவும் திட்டமிடத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தியாவில், ஆன்மிக சுற்றுலா என்பது எப்போதும் ஒரு உச்சத்திலேயே இருக்கும். கேரள மாநிலம் சபரிமலை, ஆந்திர மாநிலம் திருப்பதி, தமிழகத்தில் மதுரை, பழனி, திருச்செந்தூர், என எந்தக் கோயிலை எடுத்துக் கொண்டாலும் கூட்டத்துக்குக் குறைவில்லை.

தற்போது தென் மாநிலங்களிலிருந்து அயோத்திக்கு சிறப்பான போக்குவரத்து இன்னமும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. ஒருவேளை போக்குவரத்து மேம்படுத்தப்பட்டுவிட்டால், தென் மாநிலங்களிலிருந்து அயோத்தி செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்றே நம்பப்படுகிறது.

இதுவரை அயோத்தியில் தங்கும் வசதிகள் மற்றும் உணவு குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இனிமேல் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் நிச்சயம் உருவாகிவிடும் என்பதால், விரைவில் அயோத்தியிலும் கூட்டத்துக்குக் குறைவிருக்காது என்று கூறுகிறார்கள்.

இங்கே ராமேஸ்வரத்துக்கு வரும் மக்களில் பெரும்பாலானோர் வட இந்தியர்களாக இருப்பார்கள். இதுவரை இங்கே வந்து கொண்டிருந்தவர்கள் இனி அயோத்திக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. எனவே, ராமேஸ்வரத்தில் தங்கும் வசதிகள், உணவு வசதிகளை மேம்படுத்தினால்தான் ராமேஸ்வரம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையாமல் காக்கப்படும் என்று இங்கிருக்கும் மக்கள் கருதுகிறார்கள்.

இப்படி நாடு முழுவதுமிருக்கும் மக்களின் பார்வை அயோத்தி பக்கமாக ஒருசேர திரும்பியிருப்பதால், திருப்பதி கோயிலில் கூட்டம் குறையுமா என்று எதிர்பார்க்கிறார்கள் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புவோரும், திட்டமிடுவோரும்.. அது இனிவரும் காலங்களில் தெரியவரலாம்.

எப்போது செல்லலாம் அயோத்திக்கு?

அயோத்தியில் கூட்டம் நிரம்பி வழிவதால் இப்போதைக்கு அயோத்தி செல்வதைவிட, இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தில் செல்லலாம். பிப்ரவரி மாத இரண்டாம் வாரத்துக்குப் பிறகு பொதுத் தேர்வுகள் தொடங்கும் காலம் என்பதால், கணிசமாகக் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றும் சுற்றுலா வழிகாட்டிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com