அயோத்தி ஸ்ரீராமரின் இன்றைய தரிசனம் காண..

ராமரின் தலைநகர் அயோத்தியில் திறக்கப்பட்டுள்ள ஸ்ரீராமரின் கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீபால ராமரின் இன்றைய அலங்கார தரிசன புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அயோத்தி ஸ்ரீராமரின் இன்றைய தரிசனம் காண..


ராமரின் தலைநகர் அயோத்தியில் திறக்கப்பட்டுள்ள ஸ்ரீராமரின் கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீபால ராமரின் இன்றைய அலங்கார தரிசன புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் நாளில் மஞ்சள் மற்றும் சிவப்பு அங்கவஸ்திரத்துடன் காட்சியளித்த ஸ்ரீ பாலராமர், இன்று பச்சை பட்டாடையில், சிவப்பு ஜரிகை நேய்ந்த அங்கவஸ்திரத்துடன் மிகச் சிறப்பான அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை பிரதிஷ்டையைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலைமுதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

முதல் நாளிலேயே, ஸ்ரீராமரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் அயோத்தியில் திரண்டதால் கோயில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். முதல் நாளிலேயே ஸ்ரீ ராமரை தரிசித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கானோர் கோயிலில் குவிந்தனர்.

இன்றும் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். பலத்து பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு, பிரதான கிழக்கு வாயில் வழியாக கோயில் வளாகத்துக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். 16 அடி நீளமுள்ள 32 படிக்கட்டுகளில் ஏறி, ராமா் சந்நிதிக்குள் நுழைந்த பக்தா்கள், கருவறையில் அருள்பாலித்த ஸ்ரீபாலராமரை தரிசித்து மகிழ்ந்தனா்.

ராமஜென்ம பூமி
ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு வழங்கிய தீா்ப்பில், அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2020-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்ற பூமி பூஜையைத் தொடா்ந்து, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை மேற்பாா்வையில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்றன. நாகரா கட்டடக் கலையில் 2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் ஸ்ரீராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது.

கோயிலின் தரைத்தளப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், கருவறையில் மூலவா் ஸ்ரீபாலராமா் (ராம் லல்லா) சிலையின் பிராணப் பிரதிஷ்டை பிரதமா் மோடி முன்னிலையில் திங்கள்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.

ராமரை தரிசிக்கும் ஆவலுடன்  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்தி நோக்கி பொதுமக்கள் வந்தவண்ணம் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com