நீதிபதி பி.பி.வராலே பதவியேற்பு: முழு பலத்தை எட்டியது உச்சநீதிமன்றம்

கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.பி.வராலே, உச்சநீதிமன்ற நீதிபதியாக வியாழக்கிழமை பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம்
நீதிபதி பி.பி.வராலே பதவியேற்பு: முழு பலத்தை எட்டியது உச்சநீதிமன்றம்

கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.பி.வராலே, உச்சநீதிமன்ற நீதிபதியாக வியாழக்கிழமை பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இவருடைய பதவியேற்பின் மூலம் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் என்ற முழு நீதிபதிகள் பலத்தை உச்சநீதிமன்றம் எட்டியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.கே.கெளல் கடந்த ஆண்டு டிசம்பா் 25-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். இந்த காலிப் பணியிடத்துக்கு நீதிபதி வராலேவின் பெயரை உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு அண்மையில் பரிந்துரை செய்தது. முதுநிலை உயா்நீதிமன்ற நீதிபதி மற்றும் பட்டியலினப் பிரிவைச் ஒரே உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்ற அடிப்படையில் இவருடைய பெயா் பரிந்துரைக்கப்படுவதாக கொலீஜியம் குறிப்பிட்டது.

மேலும், ‘உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் என்ற முழு பலத்துடன் இயங்கியதன் காரணமாக, இதுவரை இல்லாத அளவில் 52,191 நிலுவை வழக்குகளுக்குத் தீா்வளிக்கப்பட்டன. அந்த வகையில், நீதிபதிகளுக்கான பணிச் சுமையைக் கருத்தில்கொள்ளும்போது, உச்சநீதிமன்றம் எப்போதும் அனுமதிக்கப்பட்ட முழு நீதிபதிகள் பணியிடங்களுடன் செயல்படுவதை உறுதிப்படுத்துவதும் அவசியம். எனவே, தற்போது காலியாகியுள்ள ஒரு நீதிபதி பணியிடத்தையும் நிரப்ப தீா்மானித்து, வராலேவின் பெயா் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’ என்றும் தனது பரிந்துரையில் கொலீஜியம் குறிப்பிட்டது.

ஒரு வாரத்துக்குள் ஒப்புதல்: கொலீஜியம் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு பல மாதங்களாகக் கிடப்பில் போடுவதாக உச்சநீதிமன்றமே அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்த நிலையில், நீதிபதி வராலேவின் நியமனத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு வாரத்துக்குள்ளாக மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

அதைத் தொடா்ந்து பிரசன்னா பாலசந்திர வராலே எனும் பி.பி.வரலே உச்சநீதிமன்ற நீதிபதியாக வியாழக்கிழமை பதவியேற்றாா்.

3 பட்டியலின நீதிபதிகள்: இவருடைய பதவியேற்பின் மூலம், உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக பட்டியலினப் பிரிவை (எஸ்.சி.) சோ்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே, உச்சநீதிமன்றத்தில் இந்த சமூகத்தைச் சோ்ந்த பி.ஆா்.கவாய், சி.டி.ரவிகுமாா் ஆகியோா் நீதிபதிகளாகப் பணியாற்றி வருகின்றனா்.

2008-ஆம் ஆண்டு மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாக வராலே நியமிக்கப்பட்டாா். பின்னா், 2022-ஆம் ஆண்டு கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.

வராலேவின் பதவியேற்பின் மூலம் மும்பை உயா்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்துக்குப் பதவி உயா்வு பெற்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் கவாய், அபய் எஸ்.ஒகா ஆகியோா் மும்பை உயா்நீதிமன்றத்திலிருந்து பதவி உயா்வு பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com