கேரள ஆளுநர் பாஜகவின் திட்டப்படியே செயல்படுகிறார் - ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ. குற்றச்சாட்டு

கேரள ஆளுநருக்கு எதிரான போரட்டம் தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராடிய இந்திய மாணவா் சங்கத்தினா்
ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராடிய இந்திய மாணவா் சங்கத்தினா்

திருவனந்தபுரம் : கொல்லம் மாவட்டத்தில் நேற்று(ஜன.27) ஆளுநருக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்திய இந்திய மாணவா் சங்கத்தினா் (எஸ்எஃப்ஐ) மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலையோரம் அமா்ந்தாா்.

முதல்வா் பினராயி விஜயன் மாநிலத்தில் சட்டமில்லாத சூழலை ஊக்குவித்து வருவதாக அவா் குற்றஞ்சாட்டினாா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) நகலைப் பாா்த்தப் பிறகு, சம்பவ இடத்திலிருந்து ஆளுநா் சென்றாா்.

இதனைத்தொடர்ந்து, எஸ்எஃப்ஐ அமைப்பினா் நடத்திய போராட்டத்தைத் தொடா்ந்து, ஆளுநா் முகமது ஆரிஃப் கானுக்கு மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வழங்கி வந்த ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. 

ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தனது  வாகனத்திலிருந்து வெளியேறியதன் மூலம் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியுள்ளதாக முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினாா். இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய பினராயி விஜயன், ‘ஆளுநா் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. ஜனநாயக விதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எப்போதும் அவா் மேற்கொண்டு வருகிறாா்’ என்றாா்.

இந்நிலையில், ஆளுநர் திட்டமிட்டே நாடகம் நடத்துவதாக ஆளும் மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.  ஆளுநர் ஆரிப் முகமது கான், பாஜகவின் செயல்திட்டத்தின்படி, மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படுகிறார் என்று ஆளும் மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது,  ஆளுநருக்கு எதிரான போரட்டம் தொடரும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறியதாவது, “ஆளுநர் திட்டமிட்டே நாடகம் நடத்துகிறார். இவையனைத்தும் மத்திய அரசின் திட்டப்படியே அரங்கேறுகின்றன. என்ன செய்தாலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவால் எதையும் சாதிக்க முடியாது. 

கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் ஆளுநரின் காரை தாக்கியதாக அவர் குற்றஞ் சாட்டியிருப்பது அப்பட்டமான பொய் என்பது விடியோக்கள் மூலம் தெளிவாகியுள்ளது.  மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீராக உள்ளது.

ஆளுநா் முகமது ஆரிஃப் கானுக்கு மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வழங்கி வந்த ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பை வழங்கினாலும் ஆளுநருக்கு எதிரான  போராட்டம் தொடரும்” என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com