நிதீஷ் குமாரின் அரசியல் பயணம்!

பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ்குமாரின் நாற்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அவர் மீது சந்தர்ப்பவாதம் என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வந்துள்ளது.
நிதீஷ் குமாரின் அரசியல் பயணம்!

பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ்குமாரின் நாற்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அவர் மீது சந்தர்ப்பவாதம் என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வந்துள்ளது.

அதேவேளையில், ஊழல், வேண்டியவர்களுக்கு சாதகமாக செயல்படுவது, தவறான நிர்வாகம் போன்றவற்றில் இருந்து விலகி நிற்பவராகவும் அவர் மீதான மக்களின் பார்வை உள்ளது.

72 வயதாகும் நிதீஷ்குமார் தனது கூட்டணிக் கட்சிகளுடன் எப்போதும் அமைதியைப் பராமரித்ததில்லை; அவர் தனது கூட்டணிக் கட்சிகளை அடிக்கடி மாற்றி வந்துள்ளார். எந்தவொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவரின் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறாத போதிலும், பிகாரில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

நிதீஷ் குமாருக்கு முதல் தேர்தல் வெற்றி கடந்த 1985-இல் நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்தது. அத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபோதிலும், ஹர்னொத் தொகுதியில் லோக் தளம் கட்சி வேட்பாளராக நிதீஷ்குமார் வெற்றி பெற்றார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அவர் எம்.பி.யாகி தில்லிக்குச் சென்றார்.

அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மண்டல் கமிஷன் தொடர்பான அலை உச்சத்தில் இருந்தபோது அதன் பலன்களை லாலு பிரசாத் அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது நிதீஷ்குமார், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸýடன் கைகோத்து சமதா கட்சி உருவாகக் காரணமாக இருந்தார். அக்கட்சியே பின்னர் ஐக்கிய ஜனதா தளமாக உருமாற்றம் பெற்று மத்தியிலும், பிகாரிலும் 2005 முதல் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியைப் பகிர்ந்து கொண்டது. பிகாரில் அவரது முதலாவது பதவிக் காலத்தை அவரது விமர்சகர்கள்கூட பாராட்டுகின்றனர். அதற்கு முன் ரௌடிக் கும்பல்களால் கொலைகளும், பணம் கேட்டுக் கடத்தல்களும் அதிக அளவில் நிகழ்ந்து வந்த பிகாரில் சட்டம்-ஒழுங்கை மீண்டும் நிலைநாட்ட நிதீஷ்குமார் பெரிதும் பாடுபட்டு அதில் வெற்றி கண்டார்.

முதல்வர் பதவி ராஜிநாமா: 2013-இல் பாஜக கூட்டணியைவிட்டு விலகிய அவர் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்தார். 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். அப்போது அவரது கட்சியைச் சேர்ந்த ஜிதன்ராம் மாஞ்சி முதல்வரானார். ஓராண்டுக்குள் மாஞ்சியை பதவி விலகச் செய்த நிதீஷ்குமார், மீண்டும் பிகார் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

2015-இல் நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை அடங்கிய மகா கூட்டணி வெற்றி பெற்றது. நிதீஷ்குமார் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். எனினும் இரண்டே ஆண்டுகளில் அக்கூட்டணியை விட்டு வெளியேறிய அவர், 2017-இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். 

2020-இல் நடைபெற்ற பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர்ந்த நிதீஷ்குமார், அத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தார்.

எனினும் 2022 ஆகஸ்ட் மாதம் அவர் மீண்டும் மகா கூட்டணிக்குத் திரும்பினார். நிதீஷ்குமார் முதல்வராகவும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

"இந்தியா' கூட்டணியில் அதிருப்தி: விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை நிதீஷ்குமார் மேற்கொண்டார். "இந்தியா' என்று பெயரிடப்பட்ட அந்தக் கூட்டணியில் நிதீஷ்குமார் முக்கியப் பங்காற்றினார்.
அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தான் அறிவிக்கப்படாததாலும், மல்லிகார்ஜுன கார்கேவை இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கூறப்பட்ட யோசனையாலும் நிதீஷ்குமார் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டது. 

இந்தச் சூழலில், நிதீஷ்குமார் தற்போது மகா கூட்டணியைவிட்டு விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். பிகார் சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைத்து விட்டு மக்களவைத் தேர்தலுடன் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் திட்டத்தில் நிதீஷ்குமார் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com