சமூகநீதி நோக்கத்திற்கு நிதீஷ் குமார் தேவையில்லை! ராகுல் காந்தி

பிகாரில் நிதீஷ் குமார் யூ டர்ன் அடித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
சமூகநீதி நோக்கத்திற்கு நிதீஷ் குமார் தேவையில்லை! ராகுல் காந்தி

இந்தியா கூட்டணி பிகாரின் சமூகநீதிக்காக தொடர்ந்து போராடும்; இந்த நோக்கத்திற்கு நிதீஷ் குமார் தேவையில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கடந்த ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் நேற்று காலை பிகார் மாநிலத்துக்குள் நுழைந்தது. 

பிகாரில் இரண்டாவது நாளாக நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதீஷ் குமார் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

நடைப்பயணத்தின்போது ராகுல் காந்தி பேசியது:

“நிதீஷ் குமார் ஏன் கூட்டணியில் இருந்து விலகினார் என்பது எனக்கு புரிகிறது. பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி அவரிடம் நேரடியாக கூறினேன். காங்கிரஸும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதீஷ் குமாரை வற்புறுத்தினோம். ஆனால், இந்த கணக்கெடுப்பு பாஜகவிடையே பயத்தை உண்டாகியது. அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள். இதனால், பாஜக நிதிஷ் குமாருக்கு பின்வாசலைத் திறந்துவிட்டுள்ளது.

பிகாரிலுள்ள பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அனைத்து துறைகளிலும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. மகாகத்பந்தன் என்னும் பிகாரின் மகா கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் துணை நிற்கும். 

மக்களிடையே போரை மூட்டிவிட்ட பாஜக ஆளும் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் நரேந்திர மோடி இன்னும் நேரில் சென்று சந்திக்கவில்லை. உங்களுக்கு அனைத்து சமூக நீதியையும் வழங்குவது இந்தியா கூட்டணியின் பொறுப்பு. அதற்கு நிதிஷ் குமார் எங்களுக்கு தேவையில்லை.” எனத் தெரிவித்தார்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிர ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்த நிதீஷ் குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பாஜகவுடன் இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com