
ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் சம்பாய் சோரன்.
மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை இன்று (ஜன. 31) ராஜிநாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் மாளிகையில் வழங்கிய நிலையில், ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜிநாமாவுக்கு ஒப்புதல் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் சட்டப்பேரவையின் புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது 67 வயதாகும் சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன் தலைமையிலான பேரவையில் போக்குவரத்துத் துறை மற்றும் பட்டியல், பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.
ஜார்கண்ட் மாநிலத்தின் கர்சவான் மாவட்டத்தைச் சேர்ந்த செரகில்லா பகுதியில் பிறந்தவர் சம்பாய் சோரன். இவரின் தந்தை சிமால் சோரன் விவசாயி. ஆரம்பக்கட்டத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயப் பணிகளில் சம்பாய் சோரன் ஈடுபட்டு வந்தார்.
குடும்ப சூழல் காரணமாக 10ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்த அவருக்கு, இளம் வயதிலேயே திருமணமும் நடைபெற்றது. அவருக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
ஜார்கண்டின் செரகில்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2009 - 2014 காலகட்டத்திம் மாநில போக்குவரத்து மற்றும் உணவுத் துறை அமைச்சராக இருந்தவர். 2019 முதல் போக்குவரத்துத் துறை மற்றும் பட்டியல், பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்துவந்தார்.
ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் மூத்த அமைச்சரான சம்பாய் சோரன் தனது பணிகளால் ஜார்கண்ட் புலி என்று அழைக்கப்படுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.