இதுதான் வளர்ச்சி.. மாநில முதல்வரே போட்ட உத்தரவு.. யார் இந்த குமாரி?

பிரபல உணவக உரிமையாளருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார் தெலங்கானா முதல்வர்.
சாய் குமாரி.
சாய் குமாரி.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சாய் குமாரி. ஹைதராபாத்திலுள்ள மாதப்பூர் என்கிற இடத்தில் சாலையோர உணவகம் ஒன்றை நடத்துகிறார்.

சில மாதங்களுக்கு முன் உணவுப்பிரியரான இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர்,  சாய் குமாரி நடத்தி வந்த உணவகத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு, குமாரி வைத்திருந்த அசைவ உணவைக் கண்டு மிரண்டுபோனவர், ‘ஒரு சாலையோர கடையில் எத்தனை வகையான உணவு’ என விடியோவைப் பதிவேற்ற குமாரியின் தொழில் வாழ்க்கை ராக்கெட் வேகத்தில் மாறியது. சிக்கன் வறுவல், சிக்கன் சில்லி, ஈரல், மட்டன் தலைக்கறி, மட்டன் குடல் கறி, மீன் வறுவல், மீன் தலைக் குழம்பு, முட்டை, நெய்சோறு, சாதம், அதுபோக 7 வகை சைவ கலவைச் சாதம் என நீண்ட பட்டியலைக் கண்ட பலரும் குமாரி உணவகத்துக்கு படையெடுக்கத் துவங்கினர். ஹைதாராத்தைத் தாண்டினாலும் சரி, உரசினாலும் சரி மதிய உணவை அங்கு வைத்துக்கொள்ளலாம் என பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே அக்கடை மாறியது. 

நாள்கள் செல்ல, செல்ல உணவகத்துக்கு வரும் 2கே கிட்ஸ்கள் ‘குமாரி ஆண்ட்டி’ என அழைக்க, அந்த உணவதுக்கு ‘குமாரி ஆண்ட்டி’ கடை என்கிற பெயரே நிலைத்துவிட்டது.  யூடியூபர்கள், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள், செய்தியாளர்கள் என குமாரியைச் சூழ்ந்து அவர் உணவு பரிமாறும் அழகை விடியோக்களாக மாற்றி லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்குக் கொண்டு சென்றனர். இதன் விளைவாக, நாள் ஒன்றுக்கு சுமார் ஐநூறு பேராவது குமாரி ஆண்ட்டி கடைக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்த வியாபாரத்தைப் பார்த்து பயந்த குமாரியே தன் கடைக்கு புதிதாக பணியாளர்களை நியமித்திருக்கிறார். மதியம் மட்டும் செயல்படும் இக்கடையின் ஒருநாள் லாபம் ரூ.40 ஆயிரம் வரை இருக்குமாம். 

ஒருகட்டத்தில், சைக்கிளிலிருந்து லம்போகினி கார் வரை குமாரியின் மதிய உணவுக்காக சாலையில் காத்திருக்கத் துவங்கியது. இதனால், கடை அமைந்திருக்கும் பகுதியில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல்களால் திணறிய காவல்துறை, குமாரியின் கடையை மூடச்சொல்லி உத்தரவு போட்டிருக்கின்றனர்.

புகழால் வந்த வினை என தன் சாப்பாட்டு ராமன்களுடன் சாலைக்கு வந்து குமாரி புலம்பித் தள்ளிவிட்டார். ஆண்ட்டிக்கு ஆதரவாக எழுந்த குரல்களால் காவல்துறையே பின்வாங்க, இப்பிரச்னையைக் கையில் எடுத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டால் என்ன? என மாநிலக் கட்சிகள் முன்வந்தது போன்ற மீம்ஸுகளும் கலக்கிக்கொண்டிருக்க, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி போக்குவரத்து துறை டிஜிபியிடம், ‘அந்த குமாரி ஆண்ட்டி கடையை மூட வேண்டாம். அவர் மேல் எதாவது வழக்கு பதிந்திருந்தால் அதையும் எடுத்துவிடுங்கள்’ என்றிருக்கிறார்.

இதனால், மகிழ்ச்சியடைந்த குமாரி ஆண்ட்டி வாடிக்கையாளர்கள் ’ரேவந்த் ரெட்டி வாழ்க’ கோஷத்தைப் போட்டு வருகிறார்கள். ரேவந்த் ரெட்டியும் விரைவில் ‘குமாரி ஆண்ட்டி’ கடைக்கு வருகை தருகிறாராம். விரைவில் என்றால்.. மக்களவைத் தேர்தலுக்கு முன் வந்து குமாரி கடையில் சாப்பிட்டு பிரச்சாரம் செய்வார்... சும்மாவா? ஆண்ட்டியின் சப்ஸ்கிரைபர்ஸ் பலம் அப்படி!  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com