கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லையா? காங்கிரஸுக்கு அகிலேஷ் பதில்!

சமாஜவாதி கட்சி கூட்டணி தர்மத்தை முறையாக பின்பற்றவில்லை என இந்தியா கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநில பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே குற்றம் சாட்டியிருந்தார். 
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்


கூட்டணி தர்மத்தை சமாஜவாதி கட்சி பின்பற்றிவருவதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

சமாஜவாதி கட்சி கூட்டணி தர்மத்தை முறையாக பின்பற்றவில்லை என இந்தியா கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநில பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே குற்றம் சாட்டியிருந்தார். 

இதற்கு பதிலளித்துப் பேசிய அகிலேஷ் யாதவ், ''உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்கிறோம். அதனால், தொகுதிகளை முறையாக ஒதுக்க வேண்டும். மாநிலத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியை வெளியேற்ற முயற்சிக்கிறோம்.

தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் பாஜகவை விரட்டுவார்கள் என சமாஜவாதி கட்சி நம்புகிறது. குறிப்பிட்ட வேட்பாளருக்காக எந்தவொரு சமரசமும் செய்யவில்லை. பாஜகவை தோற்கடிப்பதற்கான அனைத்து வகையான முயற்சிகளையும் எடுக்கிறோம்'' எனக் குறிப்பிட்டார். 

மக்களவைத் தேர்தலையொட்டி முதல் கட்டமாக 16 வேட்பாளர்களை சமாஜவாதி கட்சி நேற்று அறிவித்திருந்தது. உத்தரப் பிரதேசத்திலுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 11  தொகுதிகளை காங்கிரஸுக்கு வழங்கியிருந்தது. 

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, ''கூட்டணி தர்மத்தை சமாஜவாதி பின்பற்றவில்லை. கூட்டணியில் ஒருதலைபட்சமான அறிவிப்பை சமாஜவாதி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கோரிய தொகுதிகளில் சமாஜவாதி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸுக்கு அறிவிக்காமல் சமாஜவாதி செய்யும் இத்தகைய செயல் ஆபத்தானது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com