புலம்பெயர் தொழிலாளர்களுக்காக.. சாதாரண பெட்டிகளை தயாரிக்கிறது ரயில்வே!

தென் மாநிலங்களுக்கு வேலை தேடி வரும் வட மாநில தொழிலாளர்களுக்காக சாதாரண பெட்டிகளை அதிகம் தயாரிக்க ரயில்வே முடிவு.
ரயில் பெட்டிகளில்
ரயில் பெட்டிகளில்
Published on
Updated on
2 min read

பொது வகுப்புப் பெட்டியில் பயணிக்க டிக்கெட் எடுத்தவர்கள் முன்பதிவுப் பெட்டிகளில் ஏறிவிடுவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், பொது வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளை அதிகம் தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட அனைத்து முன்பதிவுப் பெட்டிகளிலும், சாதாரண வகுப்பில் பயணிக்க டிக்கெட் எடுத்த பயணிகள் ஏறி, முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்குத் தொல்லை கொடுப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இதனால், ரயில்வே, தனது ஆண்டு திட்டஅறிக்கையை அதற்கேற்ப மாற்றி, பொது வகுப்புப் பெட்டிகளை அதிகம் தயாரிக்கும் வகையில் திருத்தியிருக்கிறது.

இந்த மாற்றமானது, நீண்ட தூர ரயில்களில் இருந்து இரண்டாம் வகுப்பு மற்றும் பொது வகுப்புப் பெட்டிகளை படிப்படியாக அகற்றிவிட்டு, 3வது குளிர்சாதன வசதிகொண்ட பெட்டிகளை தயாரித்து சேர்ப்பது என்ற ரயில்வேயின் முக்கிய திட்டங்களில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதாவது, 2024-25 ஆம் ஆண்டில் தயாரிக்கப்படும் 6,325 ரயில் பெட்டிகளில், மொத்தம் 4,075பெட்டிகள் ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு மற்றும் பொது வகுப்புப் பெட்டிகளாக இருக்கும்.

கடந்த ஜூன் 27-ஆம் தேதி ரயில்வே வாரியம் வெளியிட்ட திருத்தப்பட்ட திட்ட அறிக்கையின்படி, 2024-25 ஆம் ஆண்டில் தயாரிக்கப்படும் பொது வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கை 1,171-இலிருந்து 2,000 ஆக உயர்த்தப்படும். இந்தப் பெட்டிகள் ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலை (சென்னை), ரயில் பெட்டித் தொழிற்சாலை (கபுர்தலா), மற்றும் நவீன பெட்டித் தொழிற்சாலை (ரேபரேலி) ஆகியவற்றில் தயாரிக்கப்படவிருக்கிறது. ஐசிஎஃப் மட்டும் இதில் 440 பெட்டிகளை தயாரிக்கவிருக்கிறது.

அதேப்போல் இந்த ஆண்டு 1,030 இரண்டாம் வகுப்புப் பெட்டிகளை தயாரிக்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 2023-24 ஆம் ஆண்டில், கூடுதலாக 438 பொது வகுப்பு /இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 704 படுக்கை வசதிகொணட் இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் தயாரிக்க ரயில்வே முன்மொழிந்தது.

கூடுதலாக, நீண்ட தூர வழித்தடங்களில் ஏசி அல்லாத பயணிகளுக்கான முதன்மையான ரயில் பெட்டியான அம்ரித் பாரத் விரைவு ரயிலின் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை 440ல் இருந்து 605 ஆக உயருகிறது.. மொத்தம் 55 அம்ரித் பாரத் பெட்டிகள் இந்த உற்பத்தி ஆலைகளில் தயாரிக்கப்படும்.

அண்மைக் காலங்களில் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்ததால் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த மூன்று தென் மாநிலங்களில் இருந்து ஷாலிமார் (ஹவுரா), குவஹாத்தி, சில்சார், பாட்னா, பொகாரோ, லக்னௌ, முசாபர்பூர் மற்றும் தானாப்பூர் போன்ற இடங்களுக்கு செல்லும் ரயில்கள், அதிக கூட்ட நெரிசலுடன் இயங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல், முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் முழுவதும் பொதுப் பெட்டிக்கு டிக்கெட் எடுத்த பயணிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகியிருக்கிறது.

இதே காரணத்தால், பண்டிகைக் காலங்களிலும் மாநிலங்களுக்கு இடையேயான விரைவு ரயில்களில், பயணிகளின் தேவை அதிகரித்து வருவதை ரயில்வே அதிகாரிகள் ஒப்புக் கொண்டு, அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலிருந்து அதற்கான டிக்கெட் எடுக்காத பயணிகளை வெளியேற்ற சிறப்பு பிரிவு இயங்கி வருகிறது என்று ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.

இதையெல்லாம் தாண்டி, இந்த ஆண்டு நிறுத்தப்பட இருந்த குளிர்சாதன வசதிகொண்ட எகானமி 3 அடுக்கு பெட்டிகளின் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது என்று ரயில்வே முடிவு செய்துள்ளது. முதலில், 787 மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டிகளை 2024-25 ல் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், புதிய திருத்தத்துக்குப் பிறகு, அதிகாரப்பூர்வ அறிக்கையில், மொத்தம் 300 குளிர்சாதன வசதிகொண்ட எகானமி 3 அடுக்குப் மற்றும் 460 வழக்கமான குளிர்சாதன வசதிகொண்ட 3 அடுக்குப் பெட்டிகள் தயாரிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com