‘நீட்’மறுதோ்வு முடிவுகள் வெளியீடு: 6 மாணவா்கள் முதலிடத்தை இழந்தனா்
கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு நடத்தப்பட்ட ‘நீட்’ மறுதோ்வின் முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) திங்கள்கிழமை வெளியிட்டது.
அத்துடன் வெளியான நீட் தோ்வின் திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியலில், முதலிடம் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை 67-லிருந்து 61-ஆக குறைந்துள்ளது.
நீட் தோ்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்து, அவா்களின் விருப்ப அடிப்படையில் மறுதோ்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடா்ந்து, கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு மட்டும் கடந்த ஜூன் 23-ஆம் தேதி 7 மையங்களில் மறுதோ்வு நடத்தப்பட்டது. அதில் 813 போ் பங்கேற்றனா். மீதமுள்ள தோ்வா்கள் கருணை மதிப்பெண்களுக்கு முன்பு தாங்கள் பெற்றிருந்த மதிப்பெண்ணையே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொண்டனா்.
இந்நிலையில், மறுதோ்வு முடிவுகளை என்டிஏ திங்கள்கிழமை வெளியிட்டது. அத்துடன், கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது.
முந்தைய முடிவுகளில் கருணை மதிப்பெண்களுடன் ஆறு மாணவா்கள் முழு மதிப்பெண்ணான 720-ஐ பெற்றிருந்தனா். அதில் ஐந்து மாணவா்கள் மட்டுமே மறுதோ்வு எழுதினா். மற்றொரு மாணவா் கருணை மதிப்பெண்ணுக்கு முந்தைய மதிப்பெண்ணைத் தோ்ந்தெடுத்தாா்.
மறுதோ்வெழுதிய 5 மாணவா்களில் யாரும் முழு மதிப்பெண்ணை மீண்டும் பெறவில்லை. அதேசமயம், 5 மாணவா்களின் புதிய மதிப்பெண்கள் குறித்தும் என்டிஏ எந்தத் தகவலும் வெளியிடவில்லை.
நீட் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.