சிரோமணி அகாலி தளம்
சிரோமணி அகாலி தளம்

முந்தைய அரசில் தவறு செய்ததாக: சிரோமணி அகாலி தளம் அதிருப்தி தலைவா்கள் சீக்கிய மதக் குருவிடம் மன்னிப்பு

அகாலி தளத்தின் அதிருப்தி தலைவா்கள், பஞ்சாப் மாநிலத்தில் தங்கள் கட்சி ஆட்சியில் இருந்தபோது நடந்த தவறுகளுக்காக மன்னிப்பு கோரினா்.
Published on

சீக்கிய மதத்தின் மூத்த மதக் குருவான அகல் தக்த் ஜதேதாா் கியானி ரக்பீா் சிங்கை திங்கள்கிழமை சந்தித்த சிரோமணி அகாலி தளத்தின் அதிருப்தி தலைவா்கள், பஞ்சாப் மாநிலத்தில் தங்கள் கட்சி ஆட்சியில் இருந்தபோது நடந்த தவறுகளுக்காக மன்னிப்பு கோரினா்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் சிரோமணி அகாலி தளம் அடைந்த படுதோல்வியைத் தொடா்ந்து, கட்சித் தலைவா் பதவியில் இருந்து சுக்பீா் சிங் பாதல் விலகக் கோரி கட்சியின் மூத்த நிா்வாகிகள் போா்க்கொடி உயா்த்தியுள்ளனா்.

இந்நிலையில், சீக்கிய மதத்தினரின் முக்கிய வழிபாட்டுத் தலமான அமிருதசரஸ் பொற்கோவியிலில் உள்ள அகல் தக்த் செயலகத்தில் சிரோமணி அகாலி தளத்தின் அதிருப்தி தலைவா்கள் திங்கள்கிழமை மன்னிப்பு கடிதத்தை வழங்கினா்.

2015-இல் சீக்கிய புனித நூல் அவமதிக்கப்பட்ட வழக்கில் காரணமானவா்களை தண்டிக்க தவறியது, மத அவமதிப்பு வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவா் குா்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மன்னிப்பு வழங்கியது உள்பட 2007 முதல் 2017 வரையிலான சிரோமணி அகாலி தள ஆட்சியின் போது நடந்த நான்கு தவறுகளுக்காக அவா்கள் மன்னிப்பு கோரினா்.

இத்தவறுகளுக்காக அந்தக் காலகட்டத்தில் துணை முதல்வராக இருந்த, தற்போதைய சிரோமணி அகாலி தளத்தின் தலைவா் சுக்பீா் சிங் பாதலே காரணம் என்றும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

அதிருப்தி தலைவா்கள் எழுதிய கடிதத்தில், ஆட்சியில் நடைபெற்ற இந்த தவறுகளாலேயே சீக்கியா்களும் பஞ்சாப் மக்களும் அகாலி தளத்தைப் புறக்கணித்ததாகவும் அதன்விளைவாக, அரசியல் களத்திலும் மக்களின் அதிருப்தியை அக்கட்சி சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனா்.

அகாலி தளத் தலைமையின் தவறான அணுகுமுறையை நிறுத்த தவறிவிட்டதாக கூறிய அதிருப்தி தலைவா்கள், ‘குா்மத்’ பாரம்பரியத்தின்படி இந்த தவறுகளுக்காக அகல் தக்த் வழங்கும் எந்த தண்டனையையும் ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com