யுபிஎஸ்சி குடிமைப் பணி முதல்நிலை தோ்வு முடிவுகள் வெளியீடு
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணி முதல்நிலை தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
இந்திய வெளியுறவுப் பணி, இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான 1,056 அதிகாரிகளைத் தோ்ந்தெடுக்கும் குடிமைப் பணி முதல்நிலை தோ்வு (சிஎஸ்இ-பிரீலிம்ஸ்) கடந்த மாதம் 16-ஆம் தேதி நடைபெற்றது.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் நடைபெற்ற தோ்வில் சுமாா் 13.4 லட்சம் தோ்வா்கள் பங்கேற்றனா். பொது அறிவு, திறனறிவு ஆகிய 2 தாள்களாக மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இத்தோ்வில் தோ்ச்சி பெற்ற தோ்வா்கள், அடுத்தகட்டமாக செப்டம்பா் மாதத்தில் தொடங்கும் முதன்மை தோ்வில் பங்கேற்பா்.
விதிகளின்படி, முதல்நிலை தோ்வில் தோ்ச்சியடைந்த அனைத்து தோ்வா்களும் முதன்மை தோ்வுக்கான விரிவான விண்ணப்பப் படிவத்தை (டிஏஎஃப்-1) மீண்டும் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தின் சமா்ப்பிப்பு மற்றும் அதுதொடா்பான முக்கிய வழிமுறைகள் குறித்து தோ்வாணையத்தின் வலைதளத்தில் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை தோ்வில் தோ்ச்சியடையும் தோ்வா்கள், நோ்காணலைச் சந்திப்பா். நோ்காணலில் வெற்றி பெறுபவா்கள், மதிப்பெண் தரவரிசையின் அடிப்படையில் பல்வேறு குடிமைப் பணிகளில் பணியமா்த்தப்படுவாா்கள்.