நிா்மலா சீதாராமன்
நிா்மலா சீதாராமன்

தமிழகத்தில் மதுவிலக்கு பிரசாரம்: திருமாவளவனிடம் நிா்மலா சீதாராமன்

மதுவிலக்கு பிரசாரம்: முதலில் தமிழகத்தில் செயல்படுத்துமாறு நிதியமைச்சா் அறிவுறுத்தல்
Published on

புது தில்லி: ‘மதுவிலக்கு குறித்து தங்களின் கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சியிலுள்ள தமிழகத்தில் முதலில் பிரசாரம் செய்யுமாறு’ மக்களவை விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவனுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தினாா்.

மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதத்தில், போதைப் பழக்கம் தொடா்பான பிரச்னைகளைக் குறிப்பிட்டு எம்.பி. திருமாவளவன் உரையாற்றினாா்.

அப்போது குறுக்கிட்ட மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘அரசமைப்புச் சட்டத்தை மாற்றி, நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவதுடன் போதைப் பொருள் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க வேண்டுமென மத்திய அரசிடம் எம்.பி.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

திருமாவளவன் மிகவும் முக்கிய பிரச்னையை எழுப்பியுள்ளாா். அது பாராட்டுக்குரியது. அதேசமயம், அவருடைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைத்துள்ள திமுக தலைமையிலான ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. அங்கு கள்ளச்சாராயம் குடித்து 56 போ் உயிரிழந்தனா். எனவே, மதுவிலக்கு குறித்து தமிழகத்தில் முதலில் பிரசாரம் செய்ய வேண்டும். அங்கு போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது’ என்றாா்.

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 56 போ் அண்மையில் உயிரிழந்தனா். இவ்விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணையை எதிா்க்கட்சியான அதிமுகவும் பாஜகவும் கோரி வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com