
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் கனமழையால் குறைந்தது 16 பேர் பலியாகியதாக தெரிவிக்கப்படுகிறது. 3 லட்சதுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மாநிலத்தில் மீட்புப் பணிகளில் ராணுவம் மற்றும் விமான படை ஈடுபட்டுவருகிறது. பிரம்மபுத்ரா கரையோரம் நான்கு நாள்களாக சிக்கிக் கொண்டிருந்த 3 மீனவர்கள்களை ராணுவ சுழலூர்தி செவ்வாய்க்கிழமை காலை மீட்டுள்ளது.
1,280 கிமீ ஓடக்கூடிய ஆசியாவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான பிரம்மபுத்ரா அஸ்ஸாம் மாநிலத்தின் வழியாக வங்கதேசம் நோக்கி பாய்கிறது. அதிகபட்ச மழையால் ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள் நதியால் துண்டிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் எல்லையொட்டி உள்ள அருணாசல பிரதேசத்திலும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் சேதமடைந்துள்ளன. சாங்லாங் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பள்ளியில் இருந்து 70 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ராணுவம் மீட்டது. அதே போல சிக்கிம், மணிப்பூர் மற்றும் மேகாலயாவிலும் சாலைகள் பாலங்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன.
மே மாத இறுதியில் ஆறு வடகிழக்கு மாநிலங்களிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80 என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
காஸிரங்கா தேசிய பூங்கா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 2500-க்கும் அதிகமான ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தின் இருப்பிடமாக உள்ள தேசிய பூங்கா விலங்குகள் வெள்ளத்தில் இருந்து உயர்வான நிலம் நோக்கி நகர்வதை பூங்காவின் அதிகாரிகள் கண்காணிப்பதாக மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா தெரிவித்துள்ளார்.
ஜூன் - செப்டம்பர் பருவமழையால் நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் அதிகளவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்கின்றன. உலகிலேயே அதிக பருமநிலை மாற்றத்தால் கனமழையையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளும் பகுதியாக அஸ்ஸாம் இருப்பதாக புது தில்லி பருவநிலை கவுன்சில் முன்னர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.