
ஹாத்ரஸில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 30 வயது காவலர், சடலங்கள் குவிவதைப் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் நேற்று மாலை ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் குழுவில் காவலர் ரவி யாதவ் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
எட்டா மருத்துவக் கல்லூரியில் பணியிலிருந்த ரவி யாதவ், சடலங்கள் குவிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், திடீரென்று மயங்கி கீழே விழுந்ததாகவும் உடனிருந்த காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக ரவி யாதவுக்கு அதே மருத்துவமனையில் உயிர் காக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டும் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அலிகார் மாவட்டத்தை சேர்ந்த ரவி யாதவுக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், "போலே பாபா' என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தனியார் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
மாலையில் நிகழ்ச்சி முடிந்து, மைதானத்தைவிட்டு மக்கள் கிளம்பும்போது கடும் நெரிசல் ஏற்பட்டது. "போலே பாபா'விடம் ஆசி பெறவும், அவரது காலடி மண்ணை சேகரிக்கவும் மக்கள் முண்டியடித்தபோது நெரிசல் ஏற்பட்டு, ஒருவர் மீது மற்றொருவர் விழுந்தனர்.
இதில், 108 பெண்கள், 7 குழந்தைகள், ஒரு ஆண் என 116 பேர் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.