ஹாத்ரஸ் சம்பவத்தில் காணாமல் போனவர்கள் சடலங்களாக! பல கண்ணீர் கதைகள்!!

ஹாத்ரஸ் சம்பவத்தில் தேடப்பட்டவர்கள் அவர்களது குடும்பத்தினரால் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஹாத்ரஸ் சம்பவத்தில் காணாமல் போனவர்கள் சடலங்களாக! பல கண்ணீர் கதைகள்!!
Rajesh Kumar Singh
Published on
Updated on
2 min read

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் செவ்வாயன்று நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழப்பு 121 ஆன நிலையில், காணாமல் தேடப் பட்டவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில், போலே பாபா என்பவரின் சொற்பொழிவு நிகழ்ச்சியின்போதுதான் இந்த அசம்பாவிதம் நேரிட்டது.

இதில் ஏராளமான பெண்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்ற நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 121 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 2.5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். பெரும்பாலானோர் பெண்கள். வட மாநிலங்களில் நடக்கும் மத நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டுத்தான் வருகிறது. இதற்கிடையேதான், ஒரே நாளில் 121 பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 80 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்றுதான் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஹாத்ரஸ் சம்பவத்தில் காணாமல் போனவர்கள் சடலங்களாக! பல கண்ணீர் கதைகள்!!
121 போ் உயிரிழந்த ஹாத்ரஸ் சம்பவம்: நீதி விசாரணைக்கு உ.பி. அரசு உத்தரவு

ஆனால், திடீரென இப்படி ஒரு இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்னதான் என்பது இதுவரை வெளியாகவில்லை. மர்மமாகவே நீடிக்கிறது. போலே பாபாவின் காலில் விழ ஏராளமானோர் முயன்றதே காரணம் என்றும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்
பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்Rajesh Kumar Singh

வினோத் சோக்னா என்பவர், தான் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் கூறி கதறினார். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி அவரது மகள், தாய், மனைவி அனைவருமே இறந்துவிட்டதாகக் கூறுகிறார். எனது மகன் போன் செய்தார், தனது தாயை காணவில்லை என்று கூறி அழுதார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தேன். அங்குச் சென்று பார்த்தால் எனது மகள் சடலமாகக் கிடந்தார். மனைவியும் இறந்துவிட்டார். தாயின் உடலைக் கூட இன்னும் காணவில்லை என்று கூறி கதறுகிறார்.

உடல்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவிய பலரில், சோனு குமாரும் ஒருவர். ஆன்மிகக் குரு என்று சொல்லிக்கொல்லும் போலே பாபா காரில் அமர்ந்து சென்றுவிட்டார். ஆனால், இங்கே ஒருவர் மீது ஒருவர் விழுந்து இத்தனை பேர் பலியாகியிருக்கிறார்கள். அவர் ஒருவரைப் பற்றியும் கவலைப்படவில்லை என்கிறார் அதிர்ச்சியிலிருந்து மீளாமல்.

தந்தையும் இல்லாமல், தாயை இழந்து தவிக்கும் ஐந்து குழந்தைகளும் தேற்ற ஆளில்லாமல் அழுதுகொண்டிருக்கிறார்கள். குவாலியரைச் சேர்ந்த 45 வயது பெண்மணி ராம்ஸ்ரீ, கூட்ட நெரிசலில் பலியாகிவிட்டார். தனது அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களுடன் சேர்ந்து ஹாத்ரஸ் வந்தவர் வீடுதிரும்பவேயில்லை. அவருடன் வந்த பெண்கள் பத்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து ராம்ஸ்ரீயை தேடி, நேற்று சடலமாகத்தான் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை பல ஆண்டுகளாக இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டிருக்கிறார். இதுதான் அவர் கலந்துகொண்ட சொற்பொழிவாக மாறிப்போயிருக்கிறது. கடைசி தருணம் வரை அவருடன்தான் நாங்கள் இருந்தோம். ஏராளமானோர் பாபா காலில் விழுந்து வணங்க ஓடினார்கள். அப்போதுதான் அவர் எங்களிடமிருந்து பிரிந்துவிட்டார் என்கிறார் ஒரு பெண் தேம்பியபடி.

பெண்கள்
பெண்கள்-

கூட்ட நெரிசல் குறித்து செய்தியைப் பார்த்ததும் சம்பவ இடத்துக்கு ஓடிய ராம்ஸ்ரீயின் மகள், அவரை அலிகார் மருத்துவமனையில் சடலமாகத்தான் அடையாளம் கண்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு எங்களது தந்தை இறந்துவிட்ட பிறகு, மூன்று மகன்கள், 2 மகள்களை எங்கள் தாய்தான் பல்வேறு வேலைகளைப் பார்த்து காப்பாற்றி வந்துள்ளார். இனி எங்களுக்கு யாருமே இல்லை என்று கதறுகிறார்கள் 5 பிள்ளைகளும். அவரது இறுதிச் சடங்கும் நேற்று மாலை செய்து முடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com