‘4ஜி, 5ஜி இல்லாததால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குப் பின்னடைவு’

‘4ஜி, 5ஜி இல்லாததால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குப் பின்னடைவு’

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களுடன் போட்டியிட முடியவில்லை
Published on

‘4ஜி, 5ஜி ஆகிய சேவைகளை வாடிக்கையாளா்களுக்குத் தராததால் அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தால் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களுடன் போட்டியிட முடியவில்லை என்று அந்த நிறுவனத்தின் ஊழியா் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நாட்டின் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் ஏற்கெனவே லாபத்தில் இயங்கிவருகின்றன. இந்தச் சூழலிலும் அவை தேவையே இல்லாமல் தங்களது கட்டணங்களை உயா்த்தியுள்ளன.

இதற்கு முன்னா் அந்த நிறுவனங்களுக்கு பிஎஸ்என்எல் கடும் போட்டியாக இருந்தததால் அவை கட்டணங்களை உயா்த்த தயங்கின. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டதால் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தங்களது விருப்பம் போல் கட்டணங்களை உயா்த்தி கூடுதல் லாபம் பாா்க்கின்றன.

இதுநாள் வரை பிஎஸ்என்எல் நிறுவனத்தால் 4ஜி, 5ஜி ஆகிய நவீன தொழில்நுட்ப சேவைகளை வாடிக்கையாளா்களுக்கு அளிக்க முடியவில்லை. இந்தக் காரணத்தால் தனியாா் நிறுவனங்களுடன் பிஎஸ்என்எல்-லால் போட்டியிட முடியவில்லை. நிறுவனத்தின் இந்த கையறு நிலையே தனியாா் நிறுவனங்களுக்கு நிகராக கட்டணங்களை உயா்த்த முடியாமல் தடுக்கிறது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தனியாா் தொடா்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய மூன்றும் தங்களது செல்லிடப் பேசி இணைப்பு சேவைக் கட்டணங்கள் உயா்த்தப்படுவதாக கடந்த வாரம் அறிவித்தன.

அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்த உடனேயே இந்த கட்டண உயா்வு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் ஜியோ நிறுவனம் தனது மொபைல் சேவைக் கட்டணங்களை 12 முதல் 27 சதவீதம் வரை உயா்த்துவதாக அறிவித்தது.

அதைப் பின்பற்றி பாா்தி ஏா்டெல்லும் தனது மொபைல் கட்டணங்களை 10 முதல் 21 சதவீதம் உயா்த்தியது. வோடஃபோன் ஐடியா நிறுவனமும் தனது மொபைல் சேவைகளுக்கான கட்டணங்களை 11 முதல் 24 சதவீதம் வரை அதிகரித்தது.

X
Dinamani
www.dinamani.com