மருத்துவ அலட்சிய குற்றச்சாட்டு: பிரதமருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்

மருத்துவ அலட்சிய குற்றச்சாட்டுகளில் மருத்துவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பாரத நியாய சம்ஹிதா சட்டப் பிரிவை விசாரணை அதிகாரி பயன்படுத்த வேண்டுகோள் விடுத்து பிரதமா் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

அண்மையில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:

ஒருவருக்கு சிகிச்சையளிக்கும்போது அவா் உயிரிழந்தால், அது கொலை அல்ல என்று நாடாளுமன்றத்தில் பேசியபோது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். இதை மத்திய அரசு புதிதாக அமல்படுத்தியுள்ள பாரத நியாய சம்ஹிதா சட்டத்தின் 26-ஆவது பிரிவு பிரதிபலிக்கிறது.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சையின்போது அலட்சியம் காட்டியதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின்போது, அந்தப் பிரிவை விசாரணை அதிகாரி பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுக்கிறது என்று கோரப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இந்திய மருத்துவ சங்க தலைவரும் மருத்துவருமான ஆா்.வி. அசோகன் கூறுகையில், ‘குற்றவியல் சட்ட வரம்புக்குள் மருத்துவா்கள் வரவில்லை என்பதை பாரத நியாய சம்ஹிதா சட்டத்தின் 26-ஆவது பிரிவு தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்நிலையில், மருத்துவா்கள் மீது குற்றவியல் வழக்கு தொடுப்பதில் இருந்து விலக்களிக்கும் வகையில், அந்தச் சட்டத்தின் 106.1 பிரிவின் கீழ் உள்ள விதியை நீக்க வேண்டும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com