
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணியில் உள்ள பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் விவரங்கள் திருடப்பட்டு, விற்பனைக்கு வந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிட்டத்தட்ட 37.5 கோடி ஏர்டெல் வாடிக்கையாளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட தரவுகள், சீனத்தைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டு, சட்டவிரோத இணையதளங்களில் விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என்று ஏர்டெல் உறுதியாக மறுத்துள்ளது.
37.5 கோடி வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களுடன் பிறந்த தேதி, தந்தை பெயர் உள்ளிட்ட அனைத்தும் விற்பனைக்கு வந்திருப்பதாக அந்தச் செய்தி கூறுகிறது.
எனினும், இதை மறுத்து ஏர்டெல் தரப்பில், ஏர்டெல் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் உள்ளிட்ட தகவல்கள் விற்பனைக்கு வந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அதன் பிறகே ஏர்டெல் அமைப்பில் எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் கொடுத்திருக்கிறது.
ஆனால், சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் மற்றொரு தகவலில், ஏர்டெல் வாடிக்கையாளர்களின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, இருப்பிட முகவரி, ஆதார் எண் உள்பட 37.5 கோடிப் பேரின் விவரங்கள் இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தரவுகளுக்கு 50 ஆயிரம் டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பலரும் தங்களுடைய எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவலை பகிர்ந்துள்ளனர். இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தகவல்கள் திருடப்பட்டதாக வெளியான தகவல் எந்த வகையிலும் உறுதி செய்யப்படவில்லை. ஏனெனில், சட்டத்துக்கு விரோதமாக இயங்கும் இதுபோன்ற இணையதளங்களில் தரவுகள் பகிர்வு மற்றும் பணப்பரிமாற்றங்கள் குறித்த எந்தத் தகவலும் அதிகாரப்பூர்வமாக கிடைக்கவோ, உறுதி செய்யவோ முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தகவல்கள் திருடப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், தங்களது வாடிக்கையாளர்களின் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.