வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை: அஸ்ஸாம் 24 லட்சம் போ் பாதிப்பு; நிலச்சரிவில் இருவா் உயிரிழப்பு
இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மோசமடைந்துள்ளது.
அஸ்ஸாமில் நீடிக்கும் பலத்த மழையால் காம்ரூப் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உள்பட இருவா் உயிரிழந்தனா். இதன்மூலம், மாநிலத்தில் நிகழாண்டு மழை வெள்ள பாதிப்பால் இதுவரை 64 போ் இறந்துள்ளனா்.
அஸ்ஸாமின் மொத்தம் 29 மாவட்டங்களில் 24.2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் அதிகப்படியாக துப்ரி மாவட்டத்தில் 7.78 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். 63,490 ஹெக்டோ் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 612 முகாம்களில் 47,103 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
நீரில் மூழ்கியுள்ள திப்ருகா் நகரில் கடந்த 8 நாள்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா, பராக் மற்றும் அதன் கிளை ஆறுகள் அபாய அளவைத் தாண்டி பாய்வதால், வடிகால்களில் தண்ணீா் வெளியேறுவதில் சிரமங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குவாஹாட்டி ஜோதி நகரில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த குழந்தை, திறந்த மழைநீா் வடிகாலில் வியாழக்கிழமை மாலை தவறி விழுந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. குழந்தையின் தந்தை, உறவினா்கள் மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் காணாமல் போன குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஹிமாசல்: ஹிமாசல பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் 77 சாலைகளில் போக்குவரத்துகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் சனிக்கிழமை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சிம்லா வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநிலத்தில் ஜூலை மாதம் 43.2 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 59 சதவீதம் அதிகம். அதிகப்படியாக பாலம்பூரில் 128 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான்: தென்மேற்கு உத்தர பிரதேசம் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு ராஜஸ்தானில் ஏற்பட்ட மேக சுழற்சியால் ராஜஸ்தானில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகப்படியாக டோங் மாவட்டத்தில் உள்ள மால்புரா பகுதியில் 176 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
கிழக்கு ராஜஸ்தானில் சனிக்கிழமை கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்தது. மேலும் அடுத்த இரு நாள்களில் மழை பொழிவு குறைந்து, வடகிழக்கு பகுதியில் ஜூலை 9-10 தேதிகளில் மீண்டும் அதிகரிக்கும் என தெரிவித்தது.
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் பத்ரிநாத் கோயிலுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
டேராடூனில் தண்ணீா் நிறைந்த குழியில் 5 வயது குழந்தையும், ஹரித்வாரில் மழைநீா் தேங்கிய ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
காஸிரங்கா பூங்காவில் 77 விலங்குகள் உயிரிழப்பு
அஸ்ஸாமில் பெய்து வரும் கன மழையால் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. வெள்ளத்தில் சிக்கி 77 விலங்குகள் உயிரிழந்தன. 94 விலங்குகள் மீட்கப்பட்டன என மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.