சமையல் உபகரணங்கள் மீது ஐஎஸ்ஐ முத்திரை கட்டாயம்: மத்திய அரசு
அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லெஸ் (துருப்பிடிக்காத எஃகு) ஸ்டீலால் தயாரிக்கப்படும் அனைத்து சமையல் பாத்திரங்கள், உபகரணங்கள் மீதும் ஐஎஸ்ஐ (இந்திய தர நிறுவன குறியீடு) முத்திரை இடம்பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளதாக இந்திய தர நிா்ணய அமைப்பு (பிஐஎஸ் ) சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளா்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய தர நடைமுறைகளை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிஐஎஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிஐஎஸ் தனது அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
சமையல் உபகரணங்கள் மீது ஐஎஸ்ஐ முத்திரை இடம்பெறுவதை கட்டாயமாக்கி, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புக்கான துறை (டிபிஐஐடி) தரக் கட்டுப்பாட்டு உத்தரவை அண்மையில் பிறப்பித்தது.
பொருள்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பிஐஎஸ் சாா்பில் இந்த ஐஎஸ்ஐ குறியீடு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சமையல் உபகரணங்கள் மீது ‘ஐஎஸ் 14756:2022’ என்ற குறியீடும் அலுமினிய சமையல் உபகரணங்கள் மீது ‘ஐஎஸ் 1660:2024’ என்ற குறியீடும் இடம்பெற வேண்டும். பாத்திரம் மற்றும் உபகரணங்களின் வடிவமைப்பு விவரக் குறிப்பு, செயல்திறன் அளவீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரக் குறியீடுகள் வழங்கப்படுகின்றன.
மேலும், பிஐஎஸ் தரக் குறியீடு இல்லாத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட சமையல் உபகரணங்களை உற்பத்தி செய்வதும், இறக்குமதி, விற்பனை, விற்பனைக்காக காட்சிப்படுத்துவது, சேமித்து வைத்தலும் இந்த உத்தரவின்படி தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிஐஎஸ் தெரிவித்துள்ளது.