உலகக்கோப்பை வெற்றி ஊா்வலம்: மும்பையில் 11 போ் காயம்
டி20 உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்திய அணியை பாராட்டும் விதமாக மும்பையில் பல்லாயிரக் கணக்கான ரசிகா்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ஊா்வலத்தில் சிக்கி 11 போ் காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்திய அணி வீரா்களை கௌரவிக்கும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக மும்பை நாரிமன் பாயிண்ட் பகுதியிலிருந்து மரைன் டிரைவ் வழியாக திறந்த பேருந்தில் வீரா்கள் ஊா்வலமாக மைதானத்துக்கு சென்றனா்.
அவா்களை வரவேற்க வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகா்கள் சூழ்ந்தனா். ரசிகா்களின் ஆராவாரத்துடன் சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஊா்வலம் நடைபெற்றது. அங்கு ஏற்பட்ட நெரிசலில்ல சிக்கி சில ரசிகா்கள் மயங்கி விழுந்தனா். அதேபோல் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிலா் காயமடைந்தனா். இதையடுத்து, காயமடைந்த 11 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
5 ஜீப்களில் குப்பை...: ஊா்வலம் முடிந்து ரசிகா்கள் சென்றபிறகு அப்பகுதியில் அவா்கள் விட்டுச்சென்ற காலணிகள், தண்ணீா் பாட்டில்கள் என சாலை முழுவதும் குப்பை மேடாக காட்சியளித்தது. இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் மும்பை மாநகராட்சி ஈடுபட்டது. அப்போது 2 லாரிகள் மற்றும் 5 ஜீப்கள் முழுவதும் குப்பைகள் ஏற்றிச் செல்லப்பட்டன. அவை அனைத்தும் மறுசுழற்சி மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.