உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பள்ளி மாணவிளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.

பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாடுகளால் அங்கு பயிலும் ஏழை எளிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவிகள் பல்வேறு இன்னல்களைச் சந்திப்பதாக காங்கிரஸ் நிா்வாகியும் சமூக ஆா்வலருமான ஜெயா தாக்கூா் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.

அந்த மனுவில்,‘ 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், உறைவிடப் பள்ளிகளில் மாணவிகளுக்கென தனி கழிப்பறைகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தவுள்ளது.

முன்னதாக இந்த மனு மீது கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது பள்ளி செல்லும் மாணவிகளுக்கு சானிட்டரி நேப்கின் வழங்குவது குறித்த தேசிய கொள்கையை தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ தெரிவித்தாா்.

அதேபோல் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வின்போது கழிவறைகளுக்குச் சென்றுவர போதுமான இடைவேளைகளை அளிக்க வேண்டும் என்றும் தோ்வு மையங்களில் இலவச நாப்கின்களை கட்டாயம் வைக்க வேண்டும் என்றும் கடந்த ஜூன் 13-ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சகம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com