
நொய்டா: ஜூலை 2ஆம் தேதி உத்தரப்பிரதேச மாவட்டம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நேரிட்ட சம்பவத்தில் 121 பேர் பலியான நிலையில், முக்கிய குற்றவாளி தேவ்பிரகாஷ் மதுகர், தில்லிக்குத் தப்பிடியோடியதாகவும் அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தில்லி காவல்நிலையத்தில் அவர் வெள்ளிக்கிழமை இரவு சரணடைந்ததாக, மதுகர் வழக்குரைஞர் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
சிறப்பு அதிரடிப் படையினரால் தேவ்பிரகாஷ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தில்லியிலிருந்து அழைத்து வரப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் முக்கிய ஏற்பாட்டாளர் மதுகர் என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஹாத்ரஸ் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரே நபர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் ஜூலை 2ஆம் தேதி திறந்தவெளி மைதானத்தில் ‘போலே பாபா’ என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட மும்மடங்காக சுமாா் 2.5 லட்சம் மக்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியின் நிறைவில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 121 போ் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடா்பாக 2 பெண்கள் உள்பட 6 நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவினரைக் கைது செய்து, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று போ் கொண்ட நீதி ஆணையத்தையும் மாநில அரசு அமைத்துள்ளது. வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டுள்ள நிகழ்ச்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளா் தலைமறைவாகியிருந்தார். அவரைத் தேடும் பணியில் காவல் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தில்லியில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.