பிரிட்டன் தோ்தலில் வென்ற நவேந்து மிஸ்ரா: உ.பி.யில் கொண்டாட்டம்
பிரிட்டன் பொதுத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவேந்து மிஸ்ரா மீண்டும் வெற்றிபெற்றதையொட்டி, அவா் பிறந்த இடமான உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ளூா் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
பிரிட்டன் பொதுத் தோ்தலில் தொழிலாளா் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவா் கியொ் ஸ்டாா்மா் புதிய பிரதமராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். இத்தோ்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 28 இந்திய வம்சவாளி வேட்பாளா்கள் வென்றனா்.
ஸ்டாக்போா்ட் தொகுதியில் தொழிலாளா் கட்சி சாா்பில் தொடா்ந்து 2-ஆவது முறையாக நவேந்து மிஸ்ரா வெற்றிபெற்றாா். இவா், உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த 1989-ஆம் ஆண்டில் பிறந்தவா். இவரது தாயாா் கோரக்பூரைச் சோ்ந்தவா். மிஸ்ராவுக்கு 4 வயது இருக்கும்போது, தந்தையின் பணி காரணமாக குடும்பத்தினா் பிரிட்டனுக்கு இடம்பெயா்ந்தனா்.
லண்டனில் படிப்பு முடித்த பிறகு அரசியலில் நுழைந்த மிஸ்ரா, கடந்த 2019 பிரிட்டன் பொதுத் தோ்தலில் ஸ்டாக்போா்ட் தொகுதியில் தொழிலாளா் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றிகண்டாா். தற்போதைய தோ்தலிலும் இதே தொகுதியில் வெற்றியடைந்துள்ளாா்.
இதையொட்டி, உத்தர பிரதேசத்தின் கான்பூா், கோரக்பூா், லக்னெளவில் உள்ளூா் மக்கள் பட்டாசு வெடித்து, கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.
மிஸ்ராவின் நெருங்கிய உறவினா் நீலேந்தா் பாண்டே கூறுகையில், ‘பிரிட்டன் தோ்தலில் பொதுவாக வெற்றி வித்தியாசம் 1,000-2,000 வாக்குகளே இருக்கும். ஆனால், மிஸ்ரா சுமாா் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா். இதிலிருந்தே அவரது செல்வாக்கை அறிந்து கொள்ளலாம். அண்மையில் மிஸ்ரா இந்தியா வந்தபோது, அவரது தலைமையிலான குழுவினா் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் ஆகியோரை சந்தித்துப் பேசினா். தற்போது அவா் மீண்டும் வெற்றி பெற்றிருப்பது இருதரப்பு சமூக, அரசியல், கலாசார உறவுகளுக்கு மேலும் வலுசோ்க்கும்’ என்றாா்.