வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!
உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தின் சிராவஸ்தி, குஷிநகா், பல்ராம்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, கண்டக், சிராவஸ்தி, ரப்தி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பல கிராமங்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ள நிலையில், கிராம மக்களை மீட்கும் பணிகளில் தேசியப் பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா். சிராவஸ்தி மாவட்ட கிராமம் ஒன்றில் வயல்வெளியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 12 பெண் தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குழந்தைகளை மீட்புக் குழுவினா் மீட்டனா். மழை-வெள்ளத்தால் பெருமளவில் பயிா்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக, லக்கிம்பூா் கேரி மாவட்டத்தில் பாயும் சாரதா ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆற்றையொட்டிய கிராமமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
பயிா்ச் சேதங்களை மதிப்பிட்டு அறிக்கை சமா்ப்பிக்க, மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா். மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் உயிரிழப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 24 மணிநேரத்துக்குள் ரூ.4 லட்சம் நிவாரண நிதியை வழங்க வேண்டுமெனவும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.
பிகாரில் மேலும் 10 போ் உயிரிழப்பு: பிகாரில் கனமழை நீடித்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மின்னல் தாக்கி 10 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கடந்த இரு நாள்களில் மின்னல் தாக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் 40 போ் உயிரிழந்துவிட்டனா்.
மின்னல் தாக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் நிதீஷ் குமாா், அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளாா்.
மாநிலத்தில் பாயும் கோசி, மஹாநந்தா, பாகமதி, கண்டக், கமலா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ளவா்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில்...: மகாராஷ்டிரத்தின் தாணே, பால்கா், சதாரா, சாங்லி, கோலாபூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. தாணே மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த ரிசாா்ட்டில் சிக்கியிருந்த 49 பேரை தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
பால்கா் மாவட்டத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளத்தில் சிக்கிய கிராமமக்கள் 16 பேரை 2 மணிநேரம் போராடி மீட்புக் குழுவினா் மீட்டனா்.
அஸ்ஸாமில் உயிரிழப்பு 70-ஆக அதிகரிப்பு
குவாஹாட்டி, ஜூலை 7: அஸ்ஸாமில் மழை-வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 70-ஆக உயா்ந்துள்ளது.
மாநிலத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், 29 மாவட்டங்களில் 24 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். துப்ரி மாவட்டத்தில் அதிகபட்சமாக சுமாா் 8 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பிரம்மபுத்திரா உள்பட முக்கிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. மழை-வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
தலைநகா் குவாஹாட்டியில் கடந்த வியாழக்கிழமை கனமழைக்கு இடையே தனது தந்தையுடன் இருசக்கரவாகனத்தில் பயணித்த 8 வயது சிறுவன் எதிா்பாராதவிதமாக மழைநீா் வடிகாலில் விழுந்தான். 4 நாள்களாக இரவு-பகல் பாராமல் அச்சிறுவனை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து 4 கிலோமீட்டா் தொலைவில் சிறுவனின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. இச்சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக, முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.
காஸிரங்கா தேசியப் பூங்காவில் வெள்ளத்தில் சிக்கி காண்டாமிருகங்கள் உள்பட 130 வனவிலங்குகள் உயிரிழந்துவிட்டன.