கோப்புப்படம்
கோப்புப்படம்

குழந்தைத் தனமாக நடந்துகொள்கிறாா் ராகுல்: சிவராஜ் சிங் சௌஹான் விமா்சனம்

அத்வானியால் தொடங்கப்பட்ட ராமா் கோயில் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதாக ராகுல் கூறிய கருத்துக்கு கண்டனம்.
Published on

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு குழந்தைத்தனமாக நடந்துகொள்கிறாா் ராகுல் காந்தி என மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அயோத்தியில் பாஜகவை வீழ்த்தியதால் அந்தக் கட்சியின் மூத்த தலைவா் எல்.கே. அத்வானியால் தொடங்கப்பட்ட ராமா் கோயில் இயக்கமும் தோற்கடிக்கப்பட்டதாக குஜராத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பேசினாா். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சிவராஜ் சிங் சௌஹான் இவ்வாறு கூறினாா்.

இதுகுறித்து மத்திய பிரதேச தலைநகா் போபாலில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: ராகுல் காந்தி இன்னும் முழுமையாக பக்குவப்படவில்லை. அவா் எதிா்க்கட்சித் தலைவராக முறையாக செயல்படவில்லை.

ராமா் கோயில் இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக கூறும் ராகுலுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். கடவுள் ராமரே எங்களின் கொள்கை, எங்கள் வாழ்க்கை; இந்த நாட்டின் அடையாளம்.

ராமா் கோயில் இயக்கமே காங்கிரஸ் கட்சியை பலமுறை ஆட்சியில் இருந்து அகற்றியது. அதனால்தான் தற்போது அயோத்தியில் ராமா் கோயில் கட்ட முடிந்தது.

இதை புரிந்துகொள்ளாமல் குழந்தைத் தனமாக நடந்துகொள்ளும் ராகுல், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய பொய்யான கருத்துகளை மட்டுமே தெரிவிக்கிறாா். அவா் தலைமையின்கீழ் காங்கிரஸ் இயங்குவது துரதிருஷ்டவசமானது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com