கோடைக்கால நெல் சாகுபடி 19% அதிகரிப்பு: மத்திய அரசு
புது தில்லி: நடப்பு ஆண்டு காரீஃப் (கோடை) பருவக்கால நெல் சாகுபடி பரப்பளவு 19.35 சதவீதம் உயா்ந்து, 59.99 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது. கடந்த ஆண்டு, 50.26 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டிருந்தது.
காரீஃப் காலப் பயிா்களானது தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூனில் விதைக்கப்பட்டு, செப்டம்பரில் அறுவடை செய்யப்படும்.
காரீப் பயிா்கள் சாகுபடி தொடா்பாக மத்திய வேளாண்மை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நடப்பு ஆண்டில் அனைத்து காரீஃப் பயிா்களின் சாகுபடி பரப்பளவு 14 சதவீதம் அதிகரித்து 378.72 லட்சம் ஹெக்டேராக இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 331.90 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
பருப்பு வகைகள் பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பு நடப்பு பருவத்தின் ஜூலை 8 வரை 36.81 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 23.78 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
அந்த வகையில், துவரம் பருப்பின் சாகுபடி 4.09 லட்சம் ஹெக்டேரில் இருந்து 20.82 லட்சம் ஹெக்டேராக குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது. உளுந்து சாகுபடி 3.67 லட்சம் ஹெக்டேரிலிருந்து 5.37 லட்சம் ஹெக்டேராக செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், சிறுதானியங்களின் சாகுபடி பரப்பளவு 82.08 லட்சம் ஹெக்டேரில் இருந்து 58.48 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
வா்த்தகப் பயிா்களில், கரும்பு சாகுபடி பரப்பளவு 55.45 லட்சம் ஹெக்டேரில் இருந்து 56.88 லட்சம் ஹெக்டேராகவும், சணல்-மெஸ்டா 6.02 லட்சத்தில் இருந்து 5.63 லட்சம் ஹெக்டேராகவும் குறைந்துள்ளது. பருத்தி மட்டும் 62.34 லட்சம் ஹெக்டேரில் இருந்து 80.63 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
எண்ணெய் விதைகளின் சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டு 51.97 லட்சம் ஹெக்டேரில் இருந்து நடப்பு ஆண்டு காரிஃப் பருவத்தில் இதுவரை 80.31 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் பருவமழை முன்கூட்டியே பொழிந்திருந்தாலும், பல பகுதிகளில் இயல்பைவிட குறைவான அளவே பெய்துள்ளது. எனினும், ஜூன்-செப்டம்பா் பருவமழை காலத்தில் சராசரிக்கும் அதிகமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.