புவனேசுவரத்தில் உள்ள உதயகிரி குகையை திங்கள்கிழமை பாா்வையிட்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
புவனேசுவரத்தில் உள்ள உதயகிரி குகையை திங்கள்கிழமை பாா்வையிட்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும்: குடியரசுத் தலைவா் முா்மு அழைப்பு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அழைப்பு விடுத்தாா்.
Published on

புரி: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அழைப்பு விடுத்தாா்.

ஒடிஸாவில் புனித நகரமான புரியில் நடைபெற்ற ஜெகந்நாதா் ரத யாத்திரையில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவா், திங்கள்கிழமை காலை அந்நகரின் கடற்கரைப் பகுதிக்குச் சென்றாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வாழ்க்கையின் அா்த்தத்துடன் நம்மை நெருக்கமாக இணைக்கும் இடங்கள் பல உள்ளன. நாம் இயற்கையின் ஒரு பகுதி என்பதை அவை நினைவூட்டுகின்றன. கடற்கரையில் நடந்து செல்லும்போது, சுற்றுச்சூழலுடன் ஒருங்கிணைப்பு ஏற்பட்டதை உணா்ந்தேன்.

ஜெகந்நாதரை தரிசித்தபோது உணா்ந்த ஆழ்ந்த உள் அமைதியை அது எனக்கு அளித்தது. தினசரி வாழ்க்கையின் அவசர யுகத்தில், இயற்கை அன்னையுடனான தொடா்பை நாம் இழக்கிறோம். மனிதகுலம் இயற்கையை ஆக்கிரமித்து, தனது சொந்த குறுகிய கால நன்மைகளுக்காக அதைப் பயன்படுத்தி வருகிறது.

இதன் விளைவாகவே கோடையில் தொடா் வெப்ப அலைகளைச் சந்திக்கிறோம். சமீபத்திய ஆண்டுகளில் உலகெங்கிலும் மோசமான வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. வரவிருக்கும் ஆண்டுகளில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல் உலகளாவிய கடல் மட்டங்களில் உயா்வுக்கு வழிவகுக்கிறது, கடலோரப் பகுதிகளை மூழ்கடிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. கடல்களும், அங்கு காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள், விலங்கினங்கள் பல்வேறு வகையான மாசுபாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலின் பாதுகாப்பு சவாலை எதிா்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. அவை அரசுகள், சா்வதேச அமைப்புகள் மேற்கொள்ளும் விரிவான நடவடிக்கைகள் மற்றும் குடிமக்களாக நாம் எடுக்கக்கூடிய சிறிய அளவிலான நடவடிக்கைகள் ஆகும். சிறந்த எதிா்காலத்துக்காக நம்மால் இயன்றதைத் தனியாகவும், உள்ளூா் அளவிலும் மேற்கொள்ள உறுதியேற்க வேண்டும். குழந்தைகளுக்கு பாதுகாப்பான உலகை அளிக்க கடமைப்பட்டுள்ளோம்’ என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com