
டி20 போட்டிகளில் ஓய்வுபெற்ற விராட் கோலிக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் விளையாடுவது கடினமானது. மேலும், அணித் தலைமை கூறும் எந்த வரிசையிலும் பேட்டிங் மூலம் பங்களிப்பை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வுபெற்றதன் மூலம் இளம்வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், “3 ஆவது வரிசையில் விளையாடுவதைப் பற்றி பேசுவது இப்போதைக்கு தேவையில்லாதது என்று நான் நினைக்கிறேன்.
ஆனால், விராட் கோலியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினமானது. ஐபிஎல்லிலும் நான் கூறியது போல், எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்கிறேன். அதேவேளையில் அவரை போன்று விளையாடுவது அதைவிடக் கடினமானது.
நிச்சயமாக, நீங்கள் உங்கள் ஆட்டத்தை விளையாட விரும்புகிறீர்கள். நீங்கள் விரும்பும் வழியில் சொந்த விளையாட்டை விளையாட விரும்புகிறீர்கள் என்றால் அதற்குத்தான் இப்போது முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
உங்கள் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எந்த நிலையில் விளையாடினாலும் அணிக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள். மேலும் நீங்கள் வெற்றிபெறும் அணியில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக 3 ஆவது வரிசையில் விளையாடினேன். அணிக்குத் தேவைப்படும் இடத்தில் பேட்டிங் செய்வேன். அணியின் தலைமை எங்கு விரும்புகிறதோ, அங்கு நான் பேட்டிங் செய்வேன்.
அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. புதிய பந்தில் விளையாட வேண்டியிருப்பதால் ஓப்பனிங்குக்கும் 3-வது வரிசையில் விளையாடுவதற்கும் அதிக வித்தியாசம் இல்லை” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.