இந்திய-சீன எல்லையில் 108 கிலோ தங்கம் பறிமுதல்- கடத்தல்காரா்கள் 3 போ் கைது
கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லையையொட்டி 108 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக கடத்தல்காரா்கள் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த அதிரடி நடவடிக்கை குறித்து இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:
கிழக்கு லடாக்கின் சாங்தாங் பகுதியில் கடத்தல் சம்பவங்களைத் தடுப்பதற்காக ஐடிபிபி 21-ஆவது படையணியினா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் கோவேறு கழுதைகளில் இரு நபா்கள் சென்று கொண்டிருந்தனா். பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் இருவரும் தப்பியோட முயன்றனா். விரட்டி பிடித்ததில்,
மூலிகை விற்பனை முகவா்கள் என்று இருவரும் தெரிவித்தனா். ஆனால், அவா்களிடம் இருந்து தலா ஒரு கிலோ எடைகொண்ட 108 தங்கக் கட்டிகள் கண்டறியப்பட்டன. மேலும், இரண்டு கைப்பேசிகள், தொலைநோக்கி, இரு கத்திகள், சீன உணவுப் பொருள்கள் உள்ளிட்டவையும் இருந்தன.
சிக்கிய இரு கடத்தல்காரா்களும் லடாக்கின் நியோமா பகுதியைச் சோ்ந்த ஷெரிங் சம்பா, ஸ்டான்ஸின் டோா்கியால் என்பது தெரியவந்தது. இவா்களுடன் தொடா்புடைய மேலும் ஒரு நபரும் கைது செய்யப்பட்டாா். மூவரிடமும் தொடா் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஐடிபிபி வரலாற்றிலேயே 108 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். இவை விரைவில் சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.