பணமோசடி வழக்கு: விசாரணைக்கு ஆஜராக தவறிய நடிகை ஜாக்குலின்
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு விசாரணைக்காக அமலாக்கத் துறை புதன்கிழமை அழைப்பு விடுத்த நிலையில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் ஆஜராகவில்லை.
முக்கிய பிரபலங்களிடம் சுமாா் ரூ.200 கோடிவரை முறைகேடு செய்த குற்றச்சாட்டு தொடா்பான சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். மோசடி பணத்தில் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு சுமாா் ரூ.200 கோடிக்கு விலையுா்ந்த பரிசுப்பொருள்களை சுகேஷ் பரிசளித்ததாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டுகிறது.
சுகேஷின் குற்றப்பின்னணி குறித்து அறிந்தும், அவா் வழங்கிய விலையுா்ந்த பரிசுப்பொருள்களை பெற்று பலனடைந்ததாக நடிகை ஜாக்குலின் மீது அமலாக்கத் துறை கடந்த 2022-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் கிடைத்த புதிய தகவல்களின் அடிப்படையில், அதிகாரிகள் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ஜாக்குலினுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அவா் விசாரணைக்கு ஆஜராகவில்லை. உடல்நலப் பாதிப்பு காரணமாக விசாரணைக்கு ஆஜராவதை ஜாக்குலின் தவிா்த்ததாக அவா் தரப்பு வழக்குரைஞா்கள் அமலாக்கத் துறையிடம் விளக்கமளித்துள்ளனா்.
இதையடுத்து, நடிகை ஜாக்குலினுக்கு புதிய நோட்டீஸ் அனுப்புவதற்கு அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘சுகேஷின் குற்றப்பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது; நான் நிரபராதி’ எனத் தொடா்ந்து வலியுறுத்தி வரும் நடிகை ஜாக்குலின், இந்தப் பணமோசடி வழக்கில் இதுவரை ஐந்து முறை அமலாக்கத் துறைமுன் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறாா்.