விஐடி போபாலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வி!

ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் போபாலில் 32 மாணவர்களுக்கு இலவச கல்விக்கான சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
விஐடி போபால்
விஐடி போபால்

விஐடி போபால் பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் பயின்று முதலிடம் பெற்ற 32 மாணவ, மாணவிகளுக்கு இலவச சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியின் (விஐடி) கிளை நிறுவனம் இயங்கி வருகின்றது.

இந்த நிறுவனத்தில் ஊரகப் பகுதி மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் ‘ஸ்டார்ஸ்’ திட்டம், கடந்த 2019-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதனால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டணமில்லா கல்வி வழங்குவதுடன் விடுதி கட்டணம் மற்றும் உணவும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், 2024-25 கல்வியாண்டில் மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளில் பயின்று முதலிடம் பிடித்த ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு இலவச கல்வி வழங்குவதற்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்வில், 16 மாணவர்கள், 16 மாணவிகளுக்கு பல்கலைக்கழக சேர்க்கைக்கான கடிதத்தை விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விஸ்வநாதன் வழங்கினார்.

தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் காதம்பரி பேசியதாவது:

“மத்தியப் பிரதேசத்தின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மிகுந்த துன்பம் மிக்க சூழல்களில் வளர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு விஐடி போபால், கல்விக் கூடமாக மட்டுமல்ல அதற்கும் மேலான ஒன்றாக அவர்கள் மனங்களில் நிறைந்துள்ளது.

வீட்டிலிருந்து பிரிந்து வந்து படித்த போதிலும், பல்கலைக்கழகத்தை அவர்கள் வீடு போலவே பாவிக்கும் அளவில் பேராசிரியர்களும் பாதுகாப்பாளர்களும் கனிவுடன் பார்த்துக் கொள்வதால் அவர்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர். ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தின் 175 ஊரக பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

மகத்தான வருங்காலத்தை உறுதி செய்கிற கல்வி வழிமுறைகளை மாணவர்களுக்கு வழங்கி அவர்களைத் திறமையாளர்களாக உருவாக்கும், மத்திய இந்தியாவின் முதன்மை தொழில்நுட்பக் கல்விக்கூடமாக விஐடி போபால் விளங்குகிறது.

முன்னணி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, வெளிநாட்டு கல்விக்கூடங்கள் ஆகியவற்றின் டாக்டர் பட்டம் பெற்ற தேர்ந்த ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும், மாணவர்கள் வருங்காலத்தில் மிளிர ஏதுவாக அவர்களைத் தயார்ப்படுத்துகின்றனர்.

வேலைவாய்ப்பை பொறுத்தவரை 90 சதவிகிதம் விஐடி போபால் சாதித்துக் காட்டியுள்ளது. ஸ்டார்ஸ் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் கெளரவம் மிகுந்த பன்னாட்டு நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். 2024-ல் தேர்ச்சி பெற்ற ஸ்டார்ஸ் மாணவர்களில் இதுவரை 19 பேர் பணி நியமனம் பெற்றுவிட்டனர்.” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்வுக்கு வருகை புரிந்தவர்களை வரவேற்று முதலாம் ஆண்டு உதவி டீன் டாக்டர். ஷ்வேதா முகர்ஜி பேசினார். விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் செந்தில் குமார் பாராட்டுரை நிகழ்த்தினார். ஸ்டார்ஸ் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அபே வித்யார்த்தி நன்றியுரை ஆற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com